Vande Bharath: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஆளுநர் தமிழிசை, அமைச்சர் எல்.முருகன்
திருநெல்வேலி - சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலான திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கியது. பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றதோடு ரயிலில் பயணம் செய்தனர். திருநெல்வேலி சென்னை இடையேயான 660 கிலோமீட்டர் தொலைவு தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லக்கூடிய இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மதியம் 2:50 சென்னை எழும்பூரில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய இந்த ரயிலுக்கு கட்டணமாக 1665 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் கார் வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க 3025 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் குழுமியிருந்து ரயிலை வழி அனுப்பி வைத்தனர்.
இந்த ரயிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நெல்லையில் இருந்து மதுரை வரை பயணம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்சி வரையிலும், நயினார் நாகேந்திரன் சென்னை வரையிலும் பயணம் மேற்கொள்கின்றனர். இதுவரை இயக்கப்பட்டு வரக்கூடிய ரயிலை விட வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் இரண்டு மணி நேரம் பயண நேரம் குறையும் என்பதால் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை போல நாடு முழுவதும் ஒன்பது ரயில் சேவைகள் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஐதராபாத் - பெங்களூர் இடையேயான ரயில் சேவை ராஞ்சி - ஹவுரா இடையேயான ரயில் சேவை உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் சேவை, சென்னை - விஜயவாடா ரயில் சேவை உள்ளிட்ட ஒன்பது சேவைகள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை இடையேயான இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குழுமியிலிருந்து ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.