ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்ற கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அகழாய்வு பணியில் இதுவரை 85 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றனர்.இந்த நிலையில் அகழாய்வு பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்தும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் தமிழகத்தின் கீழடியில் அமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி,தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணிகள் மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக எழுத்துப்பூர்வ பதில் தெரிவித்துள்ளார்.