K.P.K. Jayakumar Murder : ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்..! தோட்டத்து கிணற்றில் கிடைத்த தடயம்..! குற்றவாளியை நெருங்கியதா போலீஸ்..?
"முக்கியமாக ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் அதனை தேடும் போதே தற்போது கத்தி கிடைத்துள்ளது"
நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று அவரது மூத்த மகன் மறுநாள் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் 4 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட நாள் முதல் பல்வேறு தகவல்களும், அடுத்தத்தடுத்த தடயங்களும் வெளியாகி வருகிறது.
விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்
இருப்பினும் தற்போது வரை துப்பு துலங்காத நிலையில் காவல்துறையினர் அடுத்தடுத்த நகர்வுகளில் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். முதலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையை துவக்கிய காவல்துறையினர் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்களையும், விடை தெரியாத கேள்விகளையும் வைத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்து 4 நாட்களை கடந்தும் தற்போது வரை வழக்கை சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை
கிணற்றில் கிடைத்த கத்தி:
ஜெயக்குமார் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டவுடன் முதலில் அவருடைய உறவினர்கள், மகன்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்தே ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் வெளியாகியுள்ள, கிடைத்த தடயங்களும், எழும் சந்தேகங்களையும் தொடர்ந்து ஜெயக்குமாரின் குடும்பத்தினரே விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.
ஜெயக்குமார் மகன்களிடம் 6 முறை விசாரணை நடத்திய போலீஸ்
நேற்றுமுன் தினம் மட்டுமே ஜெயக்குமாரின் மகன்களிடம் ஆறு முறைக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக அவர்களிடம் நடத்திவரும் விசாரணை இவ்வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்று தோட்டத்தில் இருந்து கேன் ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில் அதனை காட்டி காவல்துறையினர் மூத்த மகனிடம் விசாரணை நடத்தினர்.
குடும்பம் உள்பட சந்தேகத்திற்கு இடமுள்ள அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ்
தொடர்ந்து அவரது வீடு ஆகிய இடங்களில் அங்குலம் அங்குலமாக போலீசார் ஆய்வை மேற்கொண்டனர். அதன்பின் ஜெயக்குமார் உயிரிழந்து கிடந்த தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணற்றை ஆய்வு செய்தனர். 2 வது நாளாக இன்றும் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதில் கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், கத்தி கிடைத்திருப்பதால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா?, கொலையாளிகள் யார் என்பது குறித்த முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது என்றும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் அதனை தேடும் போதே தற்போது கத்தி கிடைத்துள்ளது. இந்த வழக்கில் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் கிடைத்தால் பாதி வழக்கு முடியும்
தேடப்படும் ஜெயக்குமாரின் செல்போன் மட்டும் போலீசார் வசம் கிடைத்துவிட்டால் பாதி வழக்கு முடிந்துவிடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அந்த செல்போனை வைத்தே அவருடன் கடைசியாக பேசியது யார், தொடர்ச்சியாக பேசியது யார் ? உள்ளிட்டவைகளை கண்டறிந்து குற்றவாளிகளை போலீசார் எளிதாக நெருங்கிவிடுவார்கள். அதன்காரணமாகவே அவரது செல்போனை குற்றவாளிகளை உடைத்தோ அல்லது எங்கேனும் மறைத்தோ வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.