Sterlite Sale: ஸ்டெர்லைட் ஆலை விற்பனை;அதிர்ச்சியில் ஆதரவாளர்கள் - இன்று முதல் பட்டினி போராட்டம்
எங்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டாலும் தடையை மீறி எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் பட்டினி போராட்டம் நடத்திட தீர்மானித்துள்ளோம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்திற்கு எதிராக போராடியவர்களால் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதனால் இந்த தொழிற்சாலையை நம்பி இருந்தவர்கள் மட்டுமின்றி இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையானது தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலமாக மூடப்பட்டு இருந்தபோதும், தொடர்ந்து இந்த நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் மூலமாக சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை இப்போது வரை செய்து தான் வருகிறது. கடந்த கொரோனா காலத்தின்போது பொதுமக்களின் உயிரினை பாதுகாப்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் தாமாகவே முன்வந்து ஆக்ஜிசன் உற்பத்தி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகவே வழங்கியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தால் நிலம், நீர், காற்று என எதுவும் மாசுபடவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நிறுவனம் ஆலையை விற்பனை செய்யப்போவதாக எடுத்துள்ள தனது முடிவினை மறுபரிசீலனை செய்திடவேண்டும். தமிழக அரசானது வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் மதிப்பீட்டு குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கையை கேட்டு அது குறித்து முழுமையாக உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும். இந்த நிறுவனம் தொடர்பான ஆய்வுகள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளித்திட வேண்டும். இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படுவது குறித்து அரசு முடிவு எடுத்திடவேண்டும்.
மேலும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று முதல் கையேந்தி தொடர் பட்டினி போராட்டம் நடத்திடவும் தீர்மானித்துள்ளோம். எங்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டாலும் தடையை மீறி எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர். பேட்டியின்போது, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் தியாகராஜன், கணேசன், தனலெட்சுமி, தாமோதரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்