மாநகர மக்களின் குறைகளை தீர்க்க ‘மக்களை தேடி நம்ம மேயர் திட்டம்’ - நெல்லையில் இன்று முதல் தொடங்கியது
நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள ஒரு வார்டில் ஆய்வு செய்ததில் 300 குடிநீர் இணைப்பு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது - மாநகராட்சி ஆணையாளர்
நெல்லை மாநகராட்சியில் "மக்களை தேடி நம்ம மேயர் என்ற திட்டம்" இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் - 13க்குட்பட்ட மாநகராட்சி வரி வசூல் மையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் வார்டு எண் 1,2,13 மற்றும் 14 ஆகிய பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மேயரிடம் அளித்தனர். இதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனுக்குடன் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம், காலி மனை தீர்வை விதிப்பது, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது , தடுப்பூசி முகாம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மேயர், தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம், மக்களை தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றவுடன் மக்கள் குறைகளை நேரடியாக கேட்கும் வகையில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் அளித்த புகார்கள் 70% நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்களை தேடி நம்ம மேயர் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டு மண்டல வாரியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வார்டு வாரியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் சரிசெய்யப்பட உள்ளது.
இந்த முகாமில் உள்ளாட்சித் துறை மற்றும் இன்றி வருவாய் துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று மக்களுக்கான குறைகள் கேட்கப்பட்டு உடனுக்குடன் அதற்கான தீர்வு காணப்படும். இத்திட்டம் மாநகராட்சியில் முதற்கட்டமாக தச்சநல்லூர் மண்டத்தில் ஆரம்பித்துள்ளோம். இது மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் வார்டு வார்டாக சென்று அவர்களது குறைகள் தீர்க்கப்படும். இந்த முகாமில் மக்கள் தெரிவிக்கும் குறைகள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறும் பொழுது, மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் 80% நிறைவுபெற்றுள்ளது. பாதாள சாக்கடை பகுதி 3 க்கான ஒப்பந்தபுள்ளி கோரும் பணி நடந்து வருகிறது. தடையில்லா சான்றிதழ் கிடைத்த உடன் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாநகர பகுதிகளில் உள்ள ஒரு வார்டில் ஆய்வு செய்ததில் 300 குடிநீர் இணைப்பு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியபட்டுள்ளது. அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு சிறிய அபராதத்துடன் அனுமதி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வரி வசூல் செய்யும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும். மாநகராட்சி பகுதிகளில் வரி பாக்கி நிலுவையில் உள்ளவர்களிடம் வரி வசூல் செய்யும் பணி தினமும் காலை 7:00 மணி முதல் வரி வசூல் மையங்களில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்