TN Budget 2024: தமிழக அரசின் பட்ஜெட் மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கியதாக தாக்கல் செய்யப்பட்டது - அதியமான்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது, மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், "இன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. காலை உணவு திட்டத்தை உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் வழங்கியிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய நல்ல பெயரை அரசு எடுக்கும். அதே போல கோவையில் சென்னையிலும், மதுரையிலும் இருப்பது போன்ற ஒரு நூலகத்தை செம்மொழி பூங்காவில் அமைப்பதற்கான பணத்தை ஒதுக்கியுள்ளனர். கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பும் வந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கைக்கும், கடந்த மாதம் ஒன்றிய அரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கைக்கும் கடந்த அறிக்கையில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜீரோவாக இருந்தது. எதுவுமே இல்லாத நேரத்தில் தமிழ்நாட்டு அரசின் இந்த நிதிநிலை அறிக்கை என்பது மிகப்பெரிய வாய்ப்பை, எதிர்பார்ப்பை, மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கியதாக தாக்கல் செய்யப்பட்டது. வரும் தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை இந்தியா கூட்டணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது, இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெறுவதற்கான அனைத்து பிரச்சாரங்களையும் ஆதித்தமிழர் பேரவை மேற்கொள்ள இருக்கிறது.
சி.ஏ.டி அறிக்கையில் ஒன்றிய அரசு 7½ லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாக கூறியுள்ளது. ஆனால் ஊடகங்கள் இதனை பெரிய அளவில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் பத்திரம் பெற்றதில் பாஜக மிகப்பெரிய ஊழல் செய்துள்ளது. மற்ற கட்சிகளை விட 5 மடங்கு நிதியை பாஜக பெற்றுள்ளது. உச்சநீதிமன்றம் இன்று செல்லாது என சொன்னது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி தான். மக்களுக்கு எதுவும் தெரிய வேண்டியது இல்லையா என்பது தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடா? என்ற கேள்வி எழுகிறது. ராமர் கோவிலை வைத்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பு, அனைவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்றது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என ஒன்றிய அரசு கூறியது இதுவரை எதுவும் நிறைவேறவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது, மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. தமிழகத்தில் பெரும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது, ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை, 5 எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. 4 இடங்களில் பணிகள் முடிந்துவிட்டது.
ஆனால் மதுரை எய்ம்ஸ் ஒன்றை செங்கலோடு நிற்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்தவித புது ரெயில்வே திட்டங்களும் இல்லை, பழைய திட்டங்களை நிறைவேற்றவே இல்லை. திருக்குறளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். உள்ஒதுக்கீட்டை அதிமுக எதிர்த்தது, ஆனால் கலைஞர் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர். கலைஞரால் வடிவமைக்கப்பட்டது தான் தமிழகம். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 372 முதல் 400 இடங்களை பாஜக பிடிக்கும் என்கிறார்கள், இதைபார்க்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. வளர்ந்த நாடுகளே வாக்குச் சீட்டு பயன்படுத்தும் போது இங்கு மட்டும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்கு சீட்டு முறைதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை. எனவே அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

