Nainar Slams DMK: “Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுகவின் ஆட்சி ஒரு டிசாஸ்டர் ஆட்சி என விமர்சித்தார். அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை பட்டியலிட்டார்.

நெல்லையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில், பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில், பாஜக செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
“Disaster மாடல் ஆட்சி“
மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சி, பாலியல் வன்கொடுமைகள் நிறைந்த ஆட்சி என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், 10 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை, பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக கூறிய நயினார் நாகேந்திரன், லாக்கப்பில் ஒரு கொலையை செய்தவிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதாரணமாக ‘சாரி’ என்று சொல்கிறார் எனவும் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 60 பேர் இறந்து போனார்கள். கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் லட்சணம் என்று கடுமையாக சாடினார்.
மேலும், திமுக ஆட்சி குடும்ப ஆட்சி என்றும், பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்றும் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், மக்களிடம் போய் கேட்டால், இது ஒரு டிசாஸ்டர்(Disaster) மாடல் ஆட்சி என்று கூறுகிறார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“
தொடர்ந்து பேசிய அவர், 2021-ம் ஆண்டு, தேர்தலின் போது, நிறைய வாக்குறுதிகளை திமுக கொடுத்தது என்றும், ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதே தவிர, வாக்குறுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என கேட்ட நயினார் நாகேந்திரன், வாக்குறுதி எண் 503-ல் சிலிண்டருக்கு ரூ.100 கொடுப்போம் என்று சொன்னீர்களே, முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, வாக்குறுதி எண் 504-ல் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், வாக்குறுதி 116-ல் மீனவப் பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 159-ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதாக சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சு என்றும், 285-ல் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று சொன்னீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 356-ல் அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 163-ல் மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் எல்லாம் ஏற்பாடு செய்வோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 821-ல் மாதம் ஒரு முறை மின் கண்டன பில் அமைப்போம் என்று சொன்னீர்கள் முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 187-ல் அரசு அலுவலகங்களில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், வாக்குறுதி எண் 50-ல் ஒன்றியம் தோறும் தாணியக் கடன் அளிப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும், 183-ல் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சு என்றும் கேட்ட நயினார் நாகேந்திரன், இன்னும் சொல்லிக்கொண்டே போனால் 400 வாக்குறுதிகளை சொல்ல வேண்டும் என்று கூறினார்.
மேலும், வாக்குறுதி கொடுப்பது மு.க. ஸ்டாலினின் வழக்கம் என்றும், தேர்தல் முடிந்ததும் அதை மறப்பது அவரது பழக்கம், இப்படித் தான் தமிழ்நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.




















