12th Result 2024: சாதிய தாக்குதலால் 6 மாதம் படுத்த படுக்கை; 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்து காட்டிய நாங்குநேரி மாணவன்!
Tamil Nadu 12th Result 2024: ”6 மாத காலம் பள்ளிக்கே போகமால் நடந்தவற்றை மனஅழுத்தத்துடன் நினைத்துக்கொண்டிராமல் தன்னம்பிக்கையுடன் புதியசூழலில் புதிய பள்ளியில் படித்து இந்த மதிப்பெண்ணை பெற்ற உன்னை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன்”
![12th Result 2024: சாதிய தாக்குதலால் 6 மாதம் படுத்த படுக்கை; 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்து காட்டிய நாங்குநேரி மாணவன்! TN 12th Result 2024 Nellai Nanguneri Student Chinnadurai Who Faced Casteist Attack Secured 469 Mark TNN 12th Result 2024: சாதிய தாக்குதலால் 6 மாதம் படுத்த படுக்கை; 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்து காட்டிய நாங்குநேரி மாணவன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/bbe331a8f0a31032e0a9ecb2b942d2301714978588317571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியர். அவரது மகன் சின்னத்துரை (17). பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள கண்கார்டியா அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டியல் இன வகுப்பை சேர்ந்த சின்னத்துரைக்கு, உடன்படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் அளித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு சின்னத்துரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சின்னத்துரையிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணிக்கு வீட்டில் இருந்த சின்னத்துரையை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கு இருந்த சந்திராசெல்வி அதனை தடுத்துள்ளார்.
அப்போது அவருக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து சின்னத்துரையுடன் படித்து வந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட 6 பேரை கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சின்னத்துரைக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட உயர்சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிய அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண் பெற்றுள்ளார் சின்னத்துரை. குறிப்பாக 5 மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 1 மாதம் வேறு வீடு, பள்ளி என 6 மாத காலம் பள்ளிக்கு செல்லாமல் தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் மருத்துவமனையையே பள்ளியாக்கிக் கொண்டு படித்துள்ளார். பின் வேறு பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். வெட்டுப்பட்ட கையால் நீண்ட நேரம் எழுத முடியாத சூழலில் இந்த தேர்வும் ஆசிரியர் உதவியுடன் எழுதி இந்த மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது,
தமிழ் - 71
ஆங்கிலம் - 93
பொருளாதாரம் - 42
வணிகவியல் - 84
கணக்குப்பதிவியல்- 85
கணிப்பொறி பயன்பாடு - 94 என
மொத்தம் - 469 பெற்றுள்ளார்.
கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் காலாண்டு தேர்வும் மருத்துவமனையிலேயே எழுதியது குறிப்பிடத்தக்கது. கடினமான சூழலிலும் தனது முயற்சியை விடாமல் 469 மதிப்பெண் பெற்றுள்ள சின்னத்துரைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் மாணவன் குறித்து தனது முகநூல்ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில் ஆறுமாத காலம் பள்ளிக்கே போகமால் நடந்தவற்றை மன அழுத்தத்துடன் நினைத்துக் கொண்டிராமல் தன்னம்பிக்கையுடன் புதிய சூழலில் புதிய பள்ளியில் சேர்ந்து படித்து இந்த மதிப்பெண்ணை பெற்ற சின்னத்துரையை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன் எனவும் சின்னத்துரை படி...! மேலும் படி..! மேலும் மேலும் படி..! உனக்கான அறிவாயுதம் அதுவே..! என்று ஊக்கப்படுத்தி எழுதியிருப்பது அவரை போன்ற மற்ற மாணவர்களுக்கும் கல்வி ஒன்றே நமக்கான ஆயுதம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)