Video Warning : நெல்லை: ஆபத்தை உணராத இளைஞர்களின் பைக் சாகசம்... சமூக வலைதளங்களில் வைரல்..
வீலிங் சாகசங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்கதையாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த பைக்குகளில் சாலைகளில் வீலிங் செய்வது சாகசத்தில் ஈடுபடுவது, வண்ண வெடிகளை, வீலிங் செய்த படி வெடிக்கச்செய்வது என்பது போன்று உயிருக்கு ஆபத்தான சாகசங்களை செய்து வருகின்றனர். அதோடு அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
தங்களுக்கு வரும் லைக்குகளுக்காக ஆபத்து என்பதை உணராமலும் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். வீலிங் சாகசங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்கதையாகி வருகிறது.
மேலும் மாணவர்களின் இந்த சாகசத்தால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதால் காவல்துறையினர் பைக் ரேஸில் ஈடுபடுவதை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சமூக வலைதளத்தில் பைக் வீலிங் மற்றும் சாகசம் தொடர்பாக வீடியோவை வெளியீடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் பைக் வீலிங் செய்ததாக இருவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பிரபல கல்லூரி வாசலில் இரண்டு இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகளை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒருவர் செய்யும் சாகசத்தை ஒருவர் என மாறி மாறி வீடியோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக இளைஞர் மத்தியில் ஏற்பட்ட மோகம் காரணமாக இதுபோன்று அவ்வப்போது சாலையில் சாகசம் செய்தல், வீலிங் செய்தல் உள்ளிட்ட நிகழ்வு அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் காவல்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும், வீடியோ வெளியீடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சக வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..