விகேபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை - நெல்லையில் பரபரப்பு
தேர்தலுக்கு முன்பாக மதுக்கடையை அப்புறப்படுத்தாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று பெண்கள் எச்சரிக்கை.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம் மெயின் சாலையில் அமைந்துள்ளது டாஸ்மாக் மதுபானக்கடை. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கடந்து செல்லும் இந்த மெயின் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாக புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மதுபிரியர்கள் சாலையில் கூட்டமாக நின்று வாங்கி செல்வதுடன் அங்கேயே சாலையோரம் சிலர் குடித்துவிட்டு விழுந்து கிடப்பதும், அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவதுமாக இருப்பதால் கடும் இடையூறு இருப்பதாக தெரிவித்து வந்தனர். அதுவும் பெண்கள் அதனை கடந்து செல்லும் போது முகம் சுழிக்கும் அளவில் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.
மேலும் மெயின் சாலையில் இருக்கும் இந்த கடையை மூட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராடி வருகிறார்கள். அதற்காக பலரிடம் மனு அளித்தும், புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இதனால் உடனடியாக அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி இன்று கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விகேபுரம் நகராட்சி 19வது வார்டு பகுதி சேர்ந்த பெண்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமார், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். அப்போது வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும் பொழுது, வீட்டில் பெண் குழந்தைகள் உள்ளது. எங்களால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, இந்த கடையை கடந்து தான் செல்ல வேண்டும். வெளியே செல்லும் குழந்தைகள் வீட்டிற்கு வரும் வரை நிம்மதியில்லை, எங்களுக்கு இந்த கடையால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர், மேலும் 10 நாட்களுக்குள் கடை அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர், கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லையெனில் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.