நெல்லையில் சோகம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய அக்கா, தங்கை உட்பட 3 பேர் பலி! ஒருவர் மீட்பு..!
தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்ற அக்கா, தங்கையை காப்பாற்ற சென்றவரும் சேர்த்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்தையனார் கோவில். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது உண்டு. முன்னதாக தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நேர்த்தி கடன்களை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்வர். அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சுமார் 25 பேர் ஒரு வேனில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பட்டவராயன் கோவில் முன்பு தடாகம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் சகோதரிகளான மேனகா (18) மற்றும் சோலை ஈஸ்வரி (15) ஆகிய இருவரும் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதனைப்பார்த்த சித்தப்பா சங்கரேஸ்வரன் (40) மற்றும் மாரீஸ்வரன் (28) ஆகிய இருவரும் அவர்களை மீட்க ஆற்றில் இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக காப்பாற்ற சென்ற இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த சுற்றியிருந்தவர்கள் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளனர். அதற்குள் மற்ற மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அம்பாசமுத்திரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர தேடலுக்கு பின் மூவரையும் சடலமாக மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூவரது உடலையும் கைப்பற்றிய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களுடன் ஒரு வேனில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்ற அக்கா, தங்கையை காப்பாற்ற சென்றவரும் சேர்த்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.