வரலாற்றில் முதன்முறையாக இரவிலும் தொடர்ந்த நெல்லை மாமன்ற கூட்டம்; கூட்டத்தில் நடந்தது என்ன? - முழு விவரம் இதோ..!
நெல்லை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் இரவு வரை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களே உள்ளனர். நெல்லை மேயராக திமுகவை சேர்ந்த சரவணன் உள்ளார். இந்த நிலையில் இவர் பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே மேயருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கவுன்சிலர்கள் செயல்பட துவக்கினர், இதனால் ஒவ்வொரு மாமன்ற கூட்டங்களிலும் சலசலப்புகள், தர்ணா, போராட்டம் என கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. அப்போது அமைச்சர் நேருவை சந்தித்து கவுன்சிலர்கள் பலர் முறையிட்டனர். அதன் பின்னும் மோதல் போக்கு நீட்டிக்கவே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்ச்சர் தங்கம் தென்னரசு மேயர் மற்றும் கவுன்சிலர்களை எச்சரித்தார். தொடர்ந்து மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதன் மீதான வாக்கெடுப்பு ஜனவரி 12 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ஜனவரி 9 ஆம் தேதி நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் எனவே இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கி சென்றார். தொடர்ந்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து சென்றதுடன் 12 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கவுன்சிலர்கள் இன்றி தோல்வியில் முடிந்தது. நெல்லை மாநகராட்சியில் இதுவரை ஒரு கூட்டத்தை கூட முறையாக நடத்தாத நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் முறைப்படி நடக்குமா? நடக்காதா ? என்ற கருத்து நிலவி வந்தது. இந்த சூழலில் தான் நேற்று மாலை நெல்லை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கில் தொடங்கியது. கூட்டம் 4:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மணி வரை ஏழு கவுன்சிலர்களை தவிர எந்த கவுன்சிலர்களும் வராமல் இருந்ததால் கூட்டம் நடைபெறுமா? என்ற ஒரு சந்தேகம் இருந்தது வந்தது.
இந்த நிலையில் 5:00 மணிக்கு மேல் கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தராக வர தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து உடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் நெல்லை மாநகரப் பகுதிகளில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டதுடன் நெல்லை மாவட்டத்தில் அதிகம் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்களின் குறைகளை நேரடியாக வந்து கேட்டறிந்ததுடன் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை துரித படுத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் பேசும் எந்தவித பொருளும் செயல்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. பொதுமக்கள் எந்த பணிகளும் மாநகரப் பகுதிகளில் நடைபெறவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினரான பவுல்ராஜ் மேயர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் மாமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த முடிவில் மண்டல தலைவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளோம். செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக இந்த குழு மூலம் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் காலங்களில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய கூட்ட கேள்வி நேரத்தின் கேள்விக்கு முதலில் பதில் சொல்லவேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் விவாதம் செய்தபின் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளில் சிறப்பாக பணி செய்த நம்பிக்கையில்லா மேயரை தவிர்த்து 54 மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதிகாரிகள் முறையாக பணி செய்யவில்லை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மாநகராட்சி குழுக்கள் இடம் ஆலோசனை செய்யப்படுவதில்லை அடிப்படை வசதிகள் கூட பொதுமக்கள் செய்ய முடியாத நிலையில் தவிக்கிறோம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.
தொடர்ந்து தங்கள் பகுதியில் சீர்திருத்த பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டும் வேலை பார்க்காத காரணம் என்ன? மக்களுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் அல்வா கொடுப்பதற்கான காரணம் என்ன ? என பதாகைகளை ஏந்திய படி மாமன்ற கூட்டம் நடைபெறும் மேயரின் இருக்கை முன்பு திமுக ஏழாவது வார்டு உறுப்பினர் இந்திரா, நான்காவது வார்டு உறுப்பினர் வசந்தா, எட்டாவது வார்டு உறுப்பினர் மேரி குமாரி ஆகிய மூன்று பேரும் அல்வா மற்றும் குப்பைகளோடு வந்தனர். தொடர்ந்து பாதைகளுடன் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தனித்தனியாக மேயர் மற்றும் ஆணையர் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அனைத்து மன்ற உறுப்பினர்களும் தங்கள் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை தனி தனியாக முன் வைத்து பேசினர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மாமன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில் இரவு 10.20 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் எத்தனை? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட மனுவை கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் வழங்கினர். மேலும் நிறைவேற்றப்பட இருந்த 132 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது, 3 தீர்மானங்கள் மாநகராட்சி உறுப்பினர்களால் ரத்து செய்யப்பட்டது. நெல்லை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக 5 மணி நேரம் இரவு வரை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.