ஒருமித்த குரலாக போட்டியின்றி வெற்றிபெறவிருக்கும் நெல்லையின் புதிய மேயர்...! யார் இந்த ராமகிருஷ்ணன்?
வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுக்கள் கோராத நிலையிலும் கட்சியின் சுமூகமான நடவடிக்கை மூலமாகவும் இன்று ராமகிருஷ்ணன் நேரடியாக மேயராக அறிவிக்கப்படுவதோடு போட்டியின்றி வெற்றி பெறுவார் என்றும் தெரிகிறது.
மேயர் வேட்பாளர் (புதிய மேயர்):
நெல்லை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற கிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று அமைச்சர்கள் கே என் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக ஒரு மனதாக அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தனர். இந்த நிலையில் இன்று நடக்கவிருக்கும் மேயருக்கான தேர்தலில் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் மேயராக இருந்த சரவணன், கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக தலைமை அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் மேயர் பதவி காலியானது. இதனை நிரப்ப மாநில தேர்தல் ஆணையம் அறுவுறுத்திய நிலையில் தற்போது வரை மேயர் வேட்பாளராக போட்டியிட ஒருவர் கூட வேட்புமனுக்கள் கோராத நிலையில் கட்சியினால் நேற்று ஒருமனதாக அறிவிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் என்ற கிட்டு புதிய மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ராமகிருஷ்ணன்?
நெல்லை டவுணில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு 3 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் 1980 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகாலமாக திமுகவின் உறுப்பினராக இருந்து வருகிறார். 25 வது வார்டு உறுப்பினராக இவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். ஐந்து முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எளிமையான நபரான இவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக காரோ, இருசக்கர வாகனமோ இல்லை என்று கூறப்படுகிறது. சைக்கிள் மட்டுமே வைத்துள்ளதாக தெரிகிறது. இன்றுவரை நாள்தோறும் காலையில் சைக்கிளில் சென்றப்படி தனது வார்டில் நடைபெறும் மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதே போல மாநகராட்சியில் நடைபெறும் மன்றக் கூட்டத்திற்கு ஆட்டோவில் தான் வந்து செல்வார். இதுபோன்று மிகவும் சாதாரண எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ராமகிருஷ்ணன் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்படவிருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் கட்சியின் அடிமட்ட தொண்டனாக உள்ள ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படவிருப்பது கட்சியினரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேயர் தேர்தலும், போட்டியின்றி வெற்றியும்:
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இன்று காலை 11 மணி அளவில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர். தற்போது தேர்ந்தெடுக்கப்படும் மேயரால் மீண்டும் இதுபோன்று கட்சிக்குள் குழப்பம், பனிப்போர் போராட்டம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைவராலும் ஒருமித்த கருத்தாக மேயர் வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேறு யாரும் அவருக்கு போட்டியாக போட்டியிட வேட்புமனுக்கள் கோராத நிலையிலும் கட்சியின் சுமூகமான நடவடிக்கை மூலமாகவும் இன்று ராமகிருஷ்ணன் என்ற கிட்டு நேரடியாக மேயராக அறிவிக்கப்படுவதோடு போட்டியின்றி வெற்றி பெறுவார் என்றும் தெரிகிறது.
`