Nellai Excavation: 2ஆம் கட்ட அகழாய்வு..துலுக்கர்பட்டியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு..!
தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறியச் செய்யும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால தொன்மையான ஓடுகள், குவளைகள், பாசிமணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதன்படி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகழாய்வின் போது செஸ் விளையாடும் சூடு மண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், காதில் அணியும் சூடு மண்ணால் ஆன ஆபரணம், ஈட்டி முனை, பானை, பாசிகள், வேட்டையாட பயன்படுத்தும் கவன் கல், எலும்புகள், பழங்கால கூரை வீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உட்பட 450க்கு மேற்பட்ட பழங்கால பொருட்கள் வகைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 11 குழிகள் அமைக்கப்பட்டு முதல் கட்டத்தில் 1100க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2ம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வில் கடந்த வாரம் நான்கு தமிழி எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடு, குறியீடுகள் கொண்ட பானை ஓடு, வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள், தாழிகள் என அதிக அளவில் கிடைத்து வருகின்றன. மேலும் இரண்டாம் கட்ட அகழாய்வில் புலி என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடும் கண்டறிப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடு நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற சமூகம் வாழ்ந்து வந்தமைக்கு சான்றாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வரும் சூழலில்
கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுநர்களுக்கு கூடுதல் தெம்பையும், மகிழ்ச்சியையும் அளித்து வருகின்றது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்