(Source: ECI/ABP News/ABP Majha)
பீதியில் நெல்லை மக்கள்... தொடர்ந்து ஊருக்குள் பிடிபடும் சிறுத்தைகள் - நடப்பது என்ன?
நெல்லையில் மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தொடர்ந்து நேற்று நான்காவது சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ளது பாபநாசம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள். குறிப்பாக பாபநாசம் அருகே உள்ள வேம்பையாபுரம் மற்றும் அனவன் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் புகுந்து வீட்டில் கட்டி போட்டிருக்கும் மிருகங்களை வேட்டையாடி சென்றதாக புகார் எழுந்தது. விவசாயிகள் சங்கர் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் வளர்த்து வந்த ஆடுகளை சிறுத்தை கடந்த வாரம் கடித்து குதறி தாக்கியது. இதையடுத்து அச்சத்தில் இருந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை இணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில் அங்கு நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க அதிரடியாக கூண்டு வைக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி வேம்பையாபுரத்தில் வைத்திருந்த கூண்டில் மூன்று வயது பெண் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதனை தொடர்ந்து அனவன்குடியிருப்பு பகுதியிலும், வேம்பையாபுரம் பகுதியிலும் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூண்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் சிறுத்தை பிடிபட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே அனவன் குடியிருப்பு பகுதியில் ஆறு வயது ஆண் சிறுத்தையும், மறுநாள் அதிகாலை மீண்டும் அதே வேம்பையாபுரத்தில் இரண்டு வயது பெண் சிறுத்தையும் கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டுவிட்டனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்த சிறுத்தைகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நெல்லையில் பிடிபட்ட சிறுத்தைகளை காட்டுக்குள் விடும் வீடியோ காட்சி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் சுதந்திரத்தின் பாய்ச்சல் என்ற பெயரில் சில கருத்துக்களை பதிவிட்டதோடு சிறுத்தையை பிடிக்க ஒத்துழைத்த ஊர் மக்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அனவன் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் பீதியிலேயே இருந்த நிலையில் அங்கு மீண்டும் வைக்கப்பட்ட கூண்டில் நேற்று இரவு நான்காவதாக சிறுத்தை ஒன்ரு பிடிபட்டது.இதுவரை பிடிபட்ட சிறுத்தைகளில் இதுதான் வயது மூத்த சிறுத்தை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனவன் குடியிருப்பில் நேற்று முன் தினம் இரண்டு சிறுத்தைகள் அங்குள்ள பாறையில் நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.. மூன்று சிறுத்தைகள் அவரை பிடிபட்டும் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு கூண்டு வைக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு சிறுத்தை சிக்கி உள்ளது. எனவே தொடர்ந்து அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பிடிபட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.. நெல்லையில் மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தொடர்ந்து நேற்று நான்காவது சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளார்.. அதே சமயம் மக்களின் அச்சத்தை போக்க வனத்துறையினர் தொடர்த்து அங்கு முகாமிட்டுள்ளனர்... வனத்தில் இருந்து பல சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.