Vaikasi Visakam 2023: திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாக திருவிழா - முருகரை தரிசிக்க அலையென திரண்ட பக்தர்கள்
வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும் . பகை விலகும் பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும்.
வைகாசி விசாகம் என்பது தமிழ்க்கடவுளாம் முருகப் பெருமானின் அவதாரம் செய்த நாளே வைகாசி விசாகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியது. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும். எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நாளே விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுதற்குரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலகு வேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்பத்தில் எழுந்தருள்கிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விசாக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பச்சை நிற ஆடையணிந்து மாலை அணிந்த முருக பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மேலும் விசாக தினத்தில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.