Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் டிட்வா புயல் இலங்கையை மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையை கொட்டியது. குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு அருகே டிட்வா புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு குறைந்துள்ளது. தற்போது வடக்கு கடலோர மாவட்டங்கள் மீது நிலவி வருவதால் இதன் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மேகமூட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20 செமீ அளவிற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை எந்த மாவட்டங்களில் கன மழை
நாளைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் மீண்டும் ஒரு இடைவேளைக்குப் பிறகு, சென்னை அருகே கடுமையான மேகங்கள் உருவாகின்றன, இதன் காரணமாக கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
வெதர் மேன் அலர்ட்
கடந்த 3 மணி நேரத்தில் காலை 8.30 மணிக்கு எண்ணூர் முதல் பொன்னேரி வரை நல்ல மழை பெய்து வருகிறது. வறண்ட பகுதியாக இருந்த கரூரிலும் மழை பெய்து வருகிறது, இது தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். டிசம்பரில் அரிதாக மழை பெய்யும் பெங்களூருவில் கூட நகரின் சில இடங்களில் மழை பெய்யும். கொடைக்கானல் மற்றும் குன்னூர் ஆகிய இரு மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும். கொங்கு மண்டலத்தில் இன்று நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.





















