Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொல்லப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், அவரை சிறையில் சந்தித்து உயிரோடு இருப்பதை உறுதி செய்துள்ள அவரது சகோதரி உஸ்மா, அவர் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது அதற்கு விடை தெரிந்துள்ளது. ஆம், அவரது சகோதரி உஸ்மா ராவல்பிண்டி அடியாலா சிறையில் இம்ரான் கானை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார். ஆனால், சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக அவர் பகீர் தகவலை அளித்துள்ளர்.
இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக பரவிய வதந்தி
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனரான இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு, ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு, அப்போது முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிறைக்குள் அவரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரது கட்சித் தொண்டர்கள் சிறை வளாகத்திற்கு முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இம்ரான் கானை சந்தித்த அவரது சகோதரி உஸ்மா
இப்படிப்பட்ட சூழலில், அடியாலா சிறைக்குள் சென்று இம்ரான் கானை சந்திக்க, கடும் கட்டுப்பாடுகளுடன் அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடதது, அங்கு சென்று இம்ரான் கானை அவர் சந்தித்தாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து பேசியுள்ள உஸ்மா, இம்ரான் கான் நலமுடன் இருப்பதாகவும், ஆனால், சிறையில் அவரை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சிறையில் இம்ரான் கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தான் கொல்லப்படக் கூடும் என இம்ரான் அஞ்சுவதாகவும் உஸ்மா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அசீம் முனிர் புத்தி பேதலித்தவர் என்றும் பாகிஸ்தான் வரலாற்றில் மிகவும் கொடுங்கோலன் அவர்தான் என்றும் தனது சகோதரர் இம்ரான் கான் தன்னிடம் கூறியதாகவும் உஸ்மா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்ரான் கான் அறிக்கை
இதனிடையே, தனது சகோதரியை சந்தித்த பின் இம்ரான் கான் அளித்த அறிக்கை எனக் கூறி, அவரது கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது. அதில், தனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அதனால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்றும், அவர்களுக்கு தற்போது என்னை கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது, எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் தான் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள் என்றும் தான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு, விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டதாகவும் இம்ரான் கான் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 5 நாட்கள் தன் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், 10 நாட்கள் தான் அறையில் அடைக்கப்பட்டதாகவும், அங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளதாகவும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மேலும், ராணுவ தளபதி அசீம் முனிர், வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி என்றும் மனநிலை சரியில்லாதவர் என்றும், தனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசீம் முனிர் தான் காரணம் என்றும் அந்த அறிக்கையில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.





















