தூத்துக்குடி மாநகராட்சியில் கருப்பு நிற குடிநீர் குழாய் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் - மேயர் ஜெகன் உறுதி
மாநகராட்சியில் சேதம் அடைந்து உள்ள 47.587 கிலோ மீட்டர் நீளம் உள்ள 237 தார் சாலைகளை ரூ.21 கோடியே 75 லட்சம் மதிப்பில் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் ரோட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ கட்டப்பட்டு உள்ள பலஅடுக்கு வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வரும் வகையிலும், மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையிலும் வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.5-ம், ஒரு மாதத்துக்கு ரூ.500-ம், நான்கு சக்கர வாகனம் 6 மணி நேரத்துக்கு ரூ.10-ம், ஒரு மாதத்துக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் சேதம் அடைந்து உள்ள 47.587 கிலோ மீட்டர் நீளம் உள்ள 237 தார் சாலைகளை ரூ.21 கோடியே 75 லட்சம் மதிப்பில் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் பொதுமக்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். அம்மா உணவகம் மூடப்படுவதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பாக நடத்த வேண்டும். கோடைகாலத்திலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திறம்பட செயல்பட்டு நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள். தொடர்ந்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதியில் கறுப்பு நிற குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. வி.வி.டி. ரோட்டில் இருந்து அண்ணாநகர் பகுதிக்கு செல்லும் கறுப்பு நிற குழாய்கள் இணைக்காத நிலையில் உள்ளன. இதனை இணைப்பு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது, பல அடுக்கு வாகன காப்பகத்தில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். நடைபாதையில் வாகனங்களை நிறுத்தாமல் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். மார்க்கெட்டில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்துவதாக தெரிவித்து உள்ளார்கள். முதல்-அமைச்சர் உத்தரவின்படி அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இரண்டு நேரமும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைகாலத்தில் குடிநீர் வரத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி, ஆற்றில் நீண்ட கால்வாய் அமைத்து உறைகிணறு பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம்.
2013-ம் ஆண்டு முதல் கருப்பு நிற குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது பணியை செயல்படுத்தாமல் ஒப்பந்தாரர் சென்று விட்டார். தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொள்ளாவிட்டாலும், மாநகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தொகை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முழுமையாக முடிக்கப்படும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 15 வார்டில் 95 சதவீதம் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்றார். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.