தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள்
ஸ்டெர்லைட்ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கவும், அந்த கேமிராக்கள் அனைத்தும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படுகிற கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளார். அதனை தமிழக அரசு சார்பில் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட சிவில் கட்டுமான பாதுகாப்பு உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரி பாகங்களை வெளியில் கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியில் கொண்டு செல்வது ஆகியவற்றை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவில் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளர், தீயணைப்புத்துறை அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் ஆலையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் கழிவுகள் அகற்றும் பணிகளை முழுமையாக கண்காணிப்பதற்காக ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கவும், அந்த கேமிராக்கள் அனைத்தும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படுகிற கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும், வாசலிலும் சுமார் 18 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதே போன்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ஆலையில் இருந்து கழிவுகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.