Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த அதிநவீன விஞ்ஞான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜலகண்டாபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான என்னும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
நேரில் ஆய்வு செய்த அமைச்சர்:
அப்பொழுது அங்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களோடு அமர்ந்து அவரும் பயிற்சி வகுப்பை கவனித்தார். அதன் பிறகு ஆசிரியர்களிடம் பேசுகையில் மாணவர்களுக்கு கல்வி அறிவை விட அனுபவக் கல்வியும் கொடுக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது நான் பெருமை கொள்கிறேன். அதன் பிறகு ஆசிரியர்கள் மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதியாக நவீன வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள கட்டிடங்களை விரைவில் திறக்க உள்ளது. மாணவ மாணவிகளை பெருமளவில் அச்சுறுத்தி வரும் போதை புலக்க நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது.
இந்த சமூகமும் சார்ந்து இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளிகளில் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து போதனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் அதற்கு புராண கதைகளை கூறி அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்து வருகிறது என்று கூறினார்.
மடிக்கணினி நிறுத்தியது எதற்காக?
மேலும், விலையில்லா மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பேசி வருவதை ஏற்க முடியாது, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன ஹைடெக் ஸ்மார்ட் கணினி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட் போர்டு மூலமாக ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படுவதால் மாணவர்களின் அறிவியல் மற்றும் விஞ்ஞான அறிவு பெரும் விதமாக பெரும் முயற்சி தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார்.
இதனை செம்மைப்படுத்தும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து விஞ்ஞானக் கல்வியை கொடுக்க குழு அமைக்கப்பட்டு சிறப்பாக மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த அதிநவீன விஞ்ஞான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை:
இதனையடுத்து, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அனைத்து மாணவிகள் மத்தியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகளின் திறமை பாராட்டுக்குரியது.கல்வி சார் நடவடிக்கைகள் போன்று தனித்திறமையை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறை சார்ந்த திறமையை அரசுப் பள்ளி மாணவிகள் வெளிப்படுத்தும்போது மிகுந்த பெருமையை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும்போது சம்பந்தப்பட்ட அரசுப்பள்ளிக்கு பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கிறது. அரசுப்பள்ளி மாணவ-மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் முன்வந்து பங்கேற்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாடம் நடத்தும்போது எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் அதை கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஆசிரியர் திட்டுவார், நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற தயக்கம் இன்றி பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர் வாசிப்புத் திறன், வாசிப்பு பயிற்சியினை மாணவ-மாணவியர் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.