CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
கோயம்புத்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைத்ததால் 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மாநில மற்றும் மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்போது அதற்கு தேவைப்படும் நிலங்களை நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் உண்டு. இதுபோன்று பல்வேறு திட்டங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட நிலங்கள்:
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பல நூற்றுக்கணக்கா ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டதால் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் பலர் தங்களது நிலத்தை விடுவிக்கக் கோரி அரசிடம் தொடர்ந்து மனு அளித்தனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த கோரிக்கைக்கு கடந்த மாதமே தீர்வு கிடைத்தது. இந்த பகுதிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட சுமார் 468.89 ஏக்கர் நிலத்தை விடுவித்து தமிழ்நாடு அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
35 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினை இது.
— M.K.Stalin (@mkstalin) November 5, 2024
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது நிரந்தரத் தீர்வு வேண்டி என்னிடம் வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், வீட்டு வசதி வாரியத்திலிருந்து நிலங்களுக்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினேன்!
இதனால் சுமார் 10,000 குடும்பங்கள்… pic.twitter.com/0Z84GLZ9vH
10 ஆயிரம் குடும்பங்கள் பயன்:
அப்பகுதி மக்களின் 30 ஆண்டுளுக்கும் மேற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததையடுத்து, அவர்களுக்கான நில விடுவிப்பு ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார். கோவையில் கள ஆய்வுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் இன்று ஆணையை வழங்கினார். நில விடுவிப்பு ஆணையை நேரில் பெற்றுக்கொண்ட மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 35 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினை இது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது நிரந்தரத் தீர்வு வேண்டி என்னிடம் வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், வீட்டு வசதி வாரியத்திலிருந்து நிலங்களுக்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினேன்! இதனால் சுமார் 10,000 குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள்...
என்று பதிவிட்டுள்ளார்.