அமலை செடி ஆக்கிரமிப்பில் ஸ்ரீவைகுண்டம் அணை- அமலையையும் அகற்றவும் அணையை தூர்வாரவும் விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்கள் உள்ளன. வடகால் மூலம் 12800 ஏக்கர், தென்கால் மூலம் 12760 ஏக்கர் என மொத்தம் 25560 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தேங்கியயுள்ள அமலைச்செடிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு இந்த ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அணைக்கட்டு கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அணை முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்கள் உள்ளன. இதில் வடகால் மூலம் 12800 ஏக்கர், தென்கால் மூலம் 12760 ஏக்கர் என மொத்தம் 25560 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் ஸ்ரீவைகுண்டம் அணை விளங்குகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலைச் செடிகள் அதிகரித்து வருவதால் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட உரைக்கிணறுகளுக்கு அடியில் அமலைச் செடிகள் அதிகரித்து காணப்படுவதால் உரை கிணறுகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அணைக்கட்டு பகுதியில் குளிக்க வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தாமிரபரணி ஆறு முழுவதும் அதிக அளவில் தேங்கிக் கிடக்கும் அமலை செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதுவரை பொதுப்பணித்துறையை சார்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. கடந்த காலங்களில் அணையில் அமலை செடி தேங்காமல் இருப்பதற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறையினர் தாமாக முன்வந்து அவற்றை அகற்றி வந்தனர். ஆனால் இப்பணிகளை செய்வதற்கு பொதுப்பணிதுறையினர் சரியான ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் தற்போது பணிகளை செய்வதற்கு முன்வராமல் வருவாய்த் துறையினர் ஒதுங்கிக் கொண்டுள்ளனர். தற்போது நாளுக்கு நாள் அமலை செடிகள் அதிகரித்து நீண்ட தூரத்திற்கு தேங்கி கிடக்கிறது எனவே மாவட்ட நிர்வாகம் அமலைச் செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் பருவமழையின் போதும், அதிகப்படியான வெள்ளத்தின் போதும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் அணைப்பகுதியில் தேங்கி உள்ள அமலைகளை அகற்றவும் அணைப்பகுதியை தூர்வாருவதும் அவசியம் என்கின்றனர் விவசாயிகளும் பொதுமக்களும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

