(Source: ECI/ABP News/ABP Majha)
ஸ்ரீவைகுண்டம் அருகே சுட்டெரிக்கும் வெயில்; தீயில் கருகும் வாழைகள்- வருண பகவான் கருணை காட்டுவாரா?
கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வாழை பயிரை விவசாயம் செய்தாலும் அவ்வப்போது தீ பிடித்து பச்சை வாழையும் எரியும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிப்பதாக கூறுகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தில் பயங்கர தீ விபத்து. 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் எரிந்து நாசமானது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்துங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கரில் நெல் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது தரிசு நிலமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வாழைத்தோட்டத்தின் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் அந்த பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் அருகில் இருந்த மோட்டார் செட் மூலம் தண்ணீர் ஊற்றி இந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ வேகமாக அருகில் இருந்த வாழைத் தோட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. உடனே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் மற்றொரு இடத்திற்கு தீ அணைக்க சென்று விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தீ வாழைத் தோட்டங்களில் வேகமாக பரவி எரிந்தது. சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான வாழைகள் தீயில் கருகியது. அறுவடை நேரத்தில் குலை தள்ளியிருந்த வாழைகள் மற்றும் வாழைதார்கள் தீயில் எறிந்து சாம்பலானது. அந்த பகுதிக்கு தீயணைப்புத்துறையினரோ, வாகனமோ வரவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏரலில் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் வாழை தோட்டத்தில் பிடித்த தீயினால் 500 க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகியது. இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆதிச்சநல்லூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பனை மரங்களும் தென்னை மரங்களும் தீ பிடித்து எரிந்தது.
அக்னி நட்சத்திர வெயிலை விட கடந்த சில தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மழை இல்லாத நிலையில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் வாழை பயிரை விவசாயம் செய்தாலும் அவ்வப்போது தீ பிடித்து பச்சை வாழையும் எரியும் நிலை உள்ளதாக கூறும் விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிப்பதாக கூறுகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்