தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை டெங்கு பாதிப்பு இல்லவே இல்லை - அடித்து சொல்லும் மேயர்
மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது மாநகராட்சியை வண்ணமயமாக்குதல் உள்ளிட்ட அடுத்தக் கட்டத்துக்கு சென்று உள்ளோம் - மேயர் ஜெகன் பெரியசாமி
![தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை டெங்கு பாதிப்பு இல்லவே இல்லை - அடித்து சொல்லும் மேயர் Thoothukudi Mayor said So far there has been no dengue in Thoothukudi Corporation area TNN தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை டெங்கு பாதிப்பு இல்லவே இல்லை - அடித்து சொல்லும் மேயர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/cbfddc22ca76eaa58f4c8c2287221ad81701343287743109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் கூறும் போது, மாநகராட்சி முழுவதும் பட்டா இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த தண்ணீரை மாநகராட்சி சார்பில் அகற்ற வேண்டும், மாநகராட்சி சட்ட விதிகளின்படி காலி மனைகளில் மண் நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்கி இடங்களில் கொசுத் தொல்லை உள்ளது. கொசுமருந்து தெளிக்க வேண்டும். தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாடுகள், நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி தற்போது தண்ணீர் தேங்காத மாநகராட்சியாக மாற்றப்பட்டு உள்ளது.டெங்கு காய்ச்சல், ஒருவித மர்ம காய்ச்சல் தூத்துக்குடியில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்கு கொசு மருந்து அடித்து ப்ளீச்சிங் பவுடர்களை தெருத் தெருவாக போட வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தன. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரது அறிவுறுத்தலின் பேரில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இதனால் மாநகர பகுதியில் 80 சதவீதம் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. சில காலி இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்தந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு கொடுத்து, அந்த இடத்தை மண் போட்டு நிரப்ப அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு நிரப்பவில்லையென்றால், மாநகராட்சி சார்பில் நிரப்பி, அதற்கான தொகை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பிரச்சினை இல்லை. தற்போது மாநகராட்சியை வண்ணமயமாக்குதல் உள்ளிட்ட அடுத்தக் கட்டத்துக்கு சென்று உள்ளோம்.
மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து அதிகாரிகளும் கடுமையாக உழைத்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் 300 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மாநகராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி அனுமதி பெறாத கட்டிடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும். இதில் எந்தவித சமரசமும் கிடையாது. நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வேண்டும் என்றார்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று மின் தடை என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் இயக்கப்பட்டது. மாமன்ற கூட்டம் நடைபெறும் அரங்கில் அதிக மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மின் கசிவினால் லேசாக புகை வந்ததால் மாமன்ற கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 10.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த மாநகராட்சி கூட்டம் மின் கசிவினால் சுமார் 1.15 மணி நேர தாமதத்திற்கு பின்னர் 11.45 மணிக்கு துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)