தாயை காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த 5 வயது மகன் - பாம்பு கடித்து பலியான பரிதாபம்
பாம்பு சமையல் கட்டுக்குள் வருவதை கண்ட சிறுவன் கார்த்திக் ராஜா சமையல் கட்டில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவை கடித்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து பாம்பை விரட்ட முயற்சித்தான்.
கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர், இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள். சிறுவன் கார்த்திக் ராஜா சுறுசுறுப்பாகவே இருப்பான் எனக்கூறும் பக்கத்து வீட்டினர் அவன் தனது தாய் மீது அதிக பாசம் கொண்டவன். வழக்கம் போல் நேற்று இரவு அர்ச்சனா சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாயுடன் பேசிக்கொண்டு இருந்தான் கார்த்திக் ராஜா. இந்த நிலையில், அவரது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று நெளிந்துகொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அச்சிறுவன் அதிர்ச்சியடைந்தான்.
பாம்பு சமையல் கட்டுக்குள் வருவதை கண்ட சிறுவன் கார்த்திக் ராஜா சமையல் கட்டில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவை கடித்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து பாம்பை விரட்ட முயற்சித்துள்ளார். தனது தாயின் உயிரை காப்பாற்ற நினைத்து, அந்த சிறுவன் பாம்பை மீண்டும் மீண்டும் விரட்ட முயன்றுள்ளான். ஆனால் நல்ல பாம்பு அச்சிறுவனை கடித்து விட்டு தப்பி சென்றது.
இதில், அச்சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுமதித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயைக் காப்பாற்ற வேண்டும் முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்