கிடுகிடுவென குறையும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் - குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
ஆற்றில் வரும் நீரின் அளவானது குறைவாக இருந்தாலும் தூத்துக்குடி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கி வருகிறோம். மாநகர மக்கள் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
![கிடுகிடுவென குறையும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் - குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு Thoothukudi Drastically decreasing Papanasam, Manimuthar dam water level Possibility of drinking water shortage TNN கிடுகிடுவென குறையும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் - குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/2c2e25f56dcb208922c0f549d333a0401680627494711109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கும்,இந்த பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் முழுமையாக நிரம்பும். ஆனால் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பாமல் போனது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 21 அடியாக குறைந்துள்ளது. இதனால் பாபநாசம் அணை வறண்டு சிறிய குட்டை போன்று காட்சியளிக்கிறது. அணை பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் கடும் வெயில் காரணமாக நீர்வரத்து குறைந்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 104 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78 அடியாக உள்ளது, அணைக்கு விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாபநாசம் அணையில் நீர் இருப்பு குறைந்து விட்ட நிலையில், மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பை வைத்தே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டியுள்ளது. ஏப்ரல், மே மாதங்கள் கடும் கோடை காலமாகும். இந்த மாதத்தில் மழை கிடைக்க வாய்ப்பு இல்லை. கோடை மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.எனவே பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய 2 அணைகளிலும் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் நேரில் பார்வையிட்டு, நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கோடைகாலத்தில் தொய்வின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குடிநீர் வினியோகம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் அவர் பேசும் போது, நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் ஆற்றில் வரும் நீரின் அளவானது குறைவாக இருந்தாலும் தற்போது வரை தூத்துக்குடி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கி வருகிறோம். எனவே மாநகர மக்கள் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்கப்படுகிறது. வருகிற கோடை காலத்தை சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)