வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட துணை நீதிமன்றத்தில் வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சுதந்திர போராட்டத்துக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் புதிய உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சுதந்திரப் போராட்ட தியாகிகள் அதிகம் வாழ்ந்த பகுதியாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துணை நீதிமன்றம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சுதந்திர போராட்டத்துக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் செயல்படவில்லை. இந்த பகுதியில் உள்ள வழக்குகள் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் இணைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அசாரணை வெளியிடப்பட்டது.
அதன்படி ஓட்டப்பிடாரம் - குறுக்குச்சாலை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசும்போது, "ஓட்டப்பிடாரம் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரானார் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார்.
பின்னர் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் கோவில்பட்டிக்கு மாறுதலாகி சென்றுவிட்டது. தற்போது ஓட்டப்பிடாரத்தில் மீண்டும் நீதிமன்றம் சிறப்பாக செயல்பட உள்ளது. இந்த நீதிமன்றத்துக்கு சுமார் 1,500 குற்றவியல் வழக்குகளும், சுமார் 300 உரிமையில் வழக்குகளும் மாற்றம் செய்யப்பட உள்ளது. 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் தனியார் கட்டிடத்திலே நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலே சொந்த கட்டிடத்தில் செயல்படும். அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார்" என்றார்.
விழாவுக்கு முன்னிலை வகித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பேசும்போது, "வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்துக்கு கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலமாக சொந்த கட்டிடம் கட்டப்படும். மேலும் அரசு போக்குவரத்து கழக மேலாளரை அழைத்து எங்கெங்கு பேருந்து வசதி வேண்டுமோ அங்கு செய்யப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்த நீதிமன்றம் இன்னும் 2 வருடங்களிலோ அல்லது 3 வருடங்களிலோ புதிய வளாகத்தில் அமையும். அந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வேன்" என்றார்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்துக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உப்பட்ட முப்பலிவெட்டி பகுதியில் அரசு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தைனை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் செல்வகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரீத்தா, தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி சந்தீஸ், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.