பொதுப்பணித்துறை சார்பில் ரூ 12 கோடியில் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
கோரம்பள்ளம் குளத்தில் படர்ந்துள்ள மண் திட்டுகள் மற்றும் தரைமட்டத்துக்கு மேல் படிந்து உள்ள மண் ஆகியவை சுமார் 4 லட்சத்து 27 ஆயிரத்து 300 கனமீட்டர் வரை எடுக்கப்பட உள்ளன.
தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகாலின் கடைசி குளமாக உள்ளது தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம். கோரம்பள்ளம் குளத்தின் மூலம் 2262 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கோரம்பள்ளம் குளம் அமைந்துள்ளது.இந்த குளத்தினை நம்பி பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுபாடு, காலங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்டம் பாசனத்தில் கோரம்பள்ளம் குளம் கடைசியில் இருப்பதால் தாமிரபரணி தண்ணீர் அடிக்கடி வந்து சேருவதில்லை.தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர், கயத்தாறு, செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக ஏற்படும் காட்டாற்று வெள்ளம் கொம்பாடி ஓடை வழியாக கோரம்பள்ளம் குளத்தை சென்றடைகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி கோரம்பள்ளம் உப்பாற்று ஓடை உபரிநீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே ரூ.12 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் மற்றும் சூழலியல் பூங்காவுக்கு மண் வழங்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த குளம் தூர்வாரப்படாததால் 228 மில்லியன் கனஅடியாக இருந்த கொள்ளளவு 213 மில்லியன் கனஅடியாக குறைந்து உள்ளது. குளத்தின் மூலம் 2 ஆயிரத்து 268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று 3 ஆயிரத்து 525 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். குளத்தை தூர்வாருவதன் மூலம் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.
இந்திய நாட்டின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கி வருகிறது. தொழில் துறை முன்னேற்றம் தவிர தூத்துக்குடி மாநகரமானது பல்வேறு கல்வி நிறுவனங்களையும், ஒற்றுமை வாய்ந்த மக்கள் வாழ்க்கையையும், சமூகநல செயல்பாடுகளையும், வேளாண்மை வளர்ச்சியையும் உள்ளடங்கப் பெற்றுள்ளது. தூத்துக்குடி வாழ்மக்களின் அமைதியான, மகிழ்ச்சியான, சுகாதாரநலம், சமூகநல்லிணக்கம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளில் முக்கியமானதாக உயர்த்தப்பட்ட தளஅமைப்பில் ஒரு சூழலியல் பூங்கா அமைப்பதும் ஒன்றாகும். அந்தப் பணிக்காக தாமிரபரணி ஆற்றுப்பாசன அமைப்பில் இடம் பெற்றுள்ள வடகால் பாசனத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு சென்று பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணியை செய்வதன் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள சூழலியல் பூங்காவில் தரைமட்டம் உயர்த்தப்படுவதோடு, கோரம்பள்ளம் குளத்தின் கொள்ளளவு சுமார் 15.09 மில்லியன் கனஅடி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்தப் பணிக்காக கோரம்பள்ளம் குளத்தில் படர்ந்துள்ள மண் திட்டுகள் மற்றும் தரைமட்டத்துக்கு மேல் படிந்து உள்ள மண் ஆகியவை சுமார் 4 லட்சத்து 27 ஆயிரத்து 300 கனமீட்டர் வரை எடுக்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் கடல்நீர் உட்புதுவதும் குறைக்கப்படும். அத்திமரப்பட்டி, காலாங்கரை, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரத்து 525 விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.