அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா திமுகவை அமித்ஷா திமுக வாக மாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவையில்லாத ஒரு பதற்றம்
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலின், மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணா திமுகவை அமித்ஷா திமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.
இபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த ரகுபதி
மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் ரகுபதி பதிவிட்டுள்ளார்.





















