இரட்டை சதத்தை நோக்கி செல்லும் தக்காளி விலை - தத்தளிக்கும் நெல்லை மக்கள்
’’மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்த நிலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகள் வரவழைப்பு’’
நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். குறிப்பாக பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி பாதிப்பை சந்தித்தது. இதனால் நெல்லை தென்காசி பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி செடிகளும் நீரில் மூழ்கி அழுகியது. தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் நெல்லை காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடு கிடுவெனெ உயர்ந்து உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக மேலும் விலையானது அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்து உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் 1 கிலோ தக்காளி 15 முதல் 20 வரை விற்கப்பட்டது. பின்னர் சற்று அதிகரித்து 40 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால் இன்று நெல்லை காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் கத்தரிக்காய் 160 ரூபாய்க்கும், அவரைக்காய் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாக்கும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கலக்கம் அடைந்து உள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும் பொழுது, குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அதிக அளவில் விளைச்சல் இருக்கும், அதனால் விலை பெரும்பாலும் கட்டுக்குள் இருக்கும், சில நேரங்களில் விலையின்றி பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறும். ஆனால் இந்தாண்டு பருவமழை காரணமாக பெய்த தொடர் மழையால் தக்காளி செடிகள் நீரில் மூழ்கியதால் அழுகி விட்டன. இதனால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விட்டது, காய்கறிகள் விலை 3 முதல் 5 மடங்குகள் அதிகரித்து உள்ளது, இதனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே கடும் விலையேற்றத்தை கண்டு உள்ளது என தெரிவித்தார்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் பொழுது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த துயரத்தை சந்தித்து வந்தோம், தற்போது தான் கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து அதிலிருந்து மெதுமாக மீண்டு வர முயற்சிக்கிறோம், பொதுவாக அனைத்து பொருட்களுமே கடுமையாக விலையேற்றம் கண்டு உள்ளது. தற்போது சமைக்கும் பச்சை காய்கறிகள் அனைத்துமே விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மன நிலையில் உள்ளோம், எனவே காய்கறிகளின் இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.