களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது
காடுகளின் வளர்ச்சி சுழற்சியில் முக்கிய பங்கு பெறும் இந்த புலிகள் கணக்கெடுப்பு பல்லுயிர்ப் பெருக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மேற்குத்தொடர்ச்சி மலையில் 500 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் ஊனுண்ணி மற்றும் தாவர உண்ணிகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் விலங்குகளின் பாதம், அதன் எச்சம் மற்றும் அவை வேட்டையாடும்போது விடப்பட்டுள்ள சுவடுகள் இவற்றைக்கொண்டு கணக்கிடப்படும். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும், இந்த கணக்கெடுப்பு நான்கு நிலைகளை கொண்டது, அவற்றில் முதல் மற்றும் மூன்றாம் நிலை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவில் 17வது புலிகள் காப்பகமாகவும் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகமாகவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்தக் காப்பகத்தில் இன்று முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்குகிறது. இதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலகத்தில் துணை இயக்குனர் ரமேஸ்வரன் தலைமையில் வனச்சரகர் கார்த்திகேயன் மற்றும் உயிரியலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் கடந்த 24 ஆம் தேதி புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் பொழுது, களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் ( 29 பீட்டுகள் ) களக்காடு கோட்டத்தில் ( 21 பீட்டுகள் ) மற்றும் அருகாமையில் உள்ள நெல்லை வன உயிரின சரணாலயம், கன்னியாகுமாரி வன உயிரின சரணாலயம் ஆகிய இடங்களிலும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. வனத்துறை ஊழியர்கள் 80 பேர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் 4 முதல் 5 பேர் இடம் பெற்று உள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு அறிவுறுத்தலின்படி, இவ்வாண்டு கணக்கெடுப்பு காகிதமில்லா முறையில், இந்திய வன உயிரின நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட Ecological ஆண்ட்ராய்டு செயலி மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது, இச்செயலி எளிதான முறையில் மிகத் துல்லியமாக மனித தவறுகள் இன்றி விபரங்கள் சேகரிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சரியாக இயக்குவதற்கான பயிற்சி வகுப்புகளும் வனச்சரக வாரியாக அனைத்து களப்பணியாளர்களுக்கும் நடத்தப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி உள்ள இந்த கணக்கெடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் வனத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம்களில் தங்கி எட்டு நாட்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர், இந்த கணக்கெடுப்பில் புலிகள் மற்றும் பிற மாமிச உண்ணிகளின் மறைமுக மற்றும் நேரடி தடையங்கள் சேகரம் செய்தல், நேர்கோட்டு ஆய்வின் மூலம் இரையினங்களை கணக்கிடுதல், வாழ்விடங்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து புலிகள் கணக்கெடுப்பு மூன்றாம் நிலையான புலிகள் காப்பகத்தின் முக்கிய மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் தானியங்கி புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் 25 நாட்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள் ஆய்வுக்கு அனுப்பி பிறகு அதன் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்,