Tenkasi: ஒன்றும் அறியாத சிறுவனுக்கு போதைப் பொருள்; 16 வயது சிறார்கள் செய்த வேலை
ஒன்றும் அறியா 7 வயது சிறுவனை போதை பழக்கத்துக்கு ஆளாக்கும் வாலிப வயதுடைய சிறுவர்களின் இச்செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது நாகல்குளம் கிராமம். இக்கிராமத்தில் வீரகேரளம்புதூரை சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி வேன் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக பள்ளி முடிந்ததும் நிறுத்தப்படும் வாகனத்தை மறுநாள் காலையில் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்ல எடுத்து செல்வது வழக்கம். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேன் நாகல்குளத்தில் நிறுத்தபட்டிருந்தது. கடந்த ஞாயிறு அன்று அந்த வேனில் 7 வயது சிறுவன் ஒருவனுக்கு கூலிப் எனும் போதை பொருளை அந்த பகுதியில் உள்ள 16 வயது மதிக்கதக்க சிறுவர்கள் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
அது என்னவென்று அறியாத சிறுவன் அதனை வாங்குகிறான். அதனை வாயில் எப்படி வைக்க வேண்டும் என சொல்லி கொடுத்து வைக்க கட்டாயப்படுத்துகின்றனர் அந்த சிறுவர்கள். 7 வயது சிறுவன் அதனை வாயில் வைத்துவிட்டு உரைக்கிறது (காரமாக உள்ளது) என கூறி கீழே துப்ப முயற்சிக்கிறான். அதற்கு அவர்கள் ஒன்றும் செய்யாது நன்றாக இருக்கும் என மீண்டும் வைக்க சொல்கின்றனர். அதனை வைத்து விட்டு சிறிது நேரத்தில் உதட்டை இழுத்துபிடித்துவிட்டு கீழே துப்பி விடுகிறான் அந்த சிறுவன்.
இதனால் அந்த வாலிபர்கள் மீண்டும் இனிப்பாக இருக்கும் இதை வை என மற்றொரு கூலிப் எனும் போதை பொருளை கொடுக்கின்றனர், அதனை வாயில் வைத்து அந்த சிறுவன் போதையில் வேனில் சுற்றி வருவதும் என தடுமாறுகிறான். இதனை வீடியோவாக எடுத்து அந்த சிறுவர்கள் மகிழ்ந்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பொதுமக்கள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். நாகல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த 16 வயதுடைய 3 சிறுவர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.. ஒன்றும் அறியா 7 வயது சிறுவனை போதை பழக்கத்துக்கு ஆளாக்கும் வாலிப வயதுடைய சிறுவர்களின் இச்செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.. மேலும் இது போன்று வழிமாறி செல்லும் வாலிப வயதுடைய சிறுவர்களை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்