மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவியின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது மகளிர் உரிமைத்தொகைக்கு இனிமேல் விண்ணப்பித்தால் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த 5.27 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 76 சதவீதம் அதாவது 4 லட்சத்து 897 மகளிர் மாதம் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள்.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு என சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 70 சதவீத விண்ணப்பங்கள் அதாவது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதற்கட்டமாக ஏற்கப்பட்டன.
முதலமைச்சர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சுமார் 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு யாருக்கெல்லாம் உரிமைத்தொகை வழங்க முடியுமோ அத்தனை பேருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைத்தொகை வழங்கக்கோரி வந்த விண்ணப்பங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.