தமிழ்நாட்டில்தான் கலாச்சாரம் இருக்கிறது, அதனை நாம் இழந்து வருகிறோம் - இயக்குநர் கஸ்தூரிராஜா
தமிழ் பண்பாட்டை இழந்து வருகிறோம், பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இல்லாததால்தான் மாணவர்கள் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர்
திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா எழுதியுள்ள பாமர இலக்கியம் என்ற நூல் அறிமுக விழா நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது, தமிழ் துறை மாணவர் வாசகர் வட்டம், அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறா துறைகள் இணைந்து இந்த அறிமுக விழாவை நடத்தியது, இதில் இயக்குனர் கஸ்தூரிராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், விழாவில் அவர் பேசுகையில், ”முன்பு பெற்றோர்கள் குழந்தைகள் பின்னால் சென்று சோறு ஊட்டினர், ஆனால் இன்றைய கால கட்டத்தில் செல்போனை காட்டி உணவை திணிக்கின்றனர்.
இதுவா வாழ்க்கை? குற்றங்களை டிவியில் காண்பிக்கும்பொழுது குற்றவாளிகள் வரிசையில் 13 முதல் 20 வயதுடையவர்களாக இருக்கின்றனர், அதையெல்லாம் யார் வளர்த்தது? இதனை தடுக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது? இந்த மாதிரி காட்சிகளை பார்த்து பார்த்து சமுதாயத்தின் மீது ஒரு டென்ஷன் இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து தான் உலக நாடுகள் முழுவதும் நாகரீகம் பரவியது, உலகிலையே தமிழ்நாட்டில் தான் கலாச்சாரம் இருக்கிறது, ஆனால் அந்த கலாச்சாரத்தை நாம் இழந்து வருகிறோம், தமிழ்நாட்டு பெண்களின் கற்புதான் உலகம் முழுவதும் பேசப்படுகிறது, வேறு எந்த நாட்டிலும் பெண்ணுக்கு சரித்திரம் இல்லை, கண்ணகியின் சரித்திரம் போன்று வெளியூரில் ஒரு சரித்திரம் இல்லை, பாமர இலக்கியம் என்பது விவசாயிகளுக்கோ, கிரமத்தானுக்காகவோ மட்டும் எழுத்தப்பட்ட நூல் அல்ல, இது உங்களுக்காக எழுதப்பட்டது என மாணவர் மத்தியில் பேசினார்,
தொடர்ந்து இயக்குநர் கஸ்தூரிராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பாமர இலக்கியம் இந்த நூல் 900 பக்கங்களை கொண்ட தமிழ் கலாச்சார பதிவு. இதனை ஒவ்வொரு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சென்று எடுத்து சொல்லி வருகிறேன், மாணவர்களும் அதனை விரும்பி கேட்கின்றனர், இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை? அவர்களின் பிரயாணம் எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறது, அவர்களை எது வகைப்படுத்தும், வழிப்படுத்தும், முன்னேற்றப்படுத்தும் என்பதை இந்நூலில் எழுதியுள்ளேன். இதனை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும்,
இது எழுத்தப்பட்டிருக்கும் மொழி, இது எழுத்து மொழியாக இல்லாமல் பேச்சு மொழியாக இருக்கிறது, கிட்டத்தட்ட தென் தமிழ் நாடு முழுவதும் பேசக்கூடிய பேச்சு மொழியில் இதனை எழுதியுள்ளேன், இதற்கு காரணம் நாகரீகம் என்ற பெயரில் பேச்சு மொழி தமிழ்நாட்டில் அழிந்து வருகிறது. அவர்கள் தொலைத்துவிட்டு வந்த மொழி, பேச்சுக்கள், உறவின் பெயர்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவது இல்லை, தமிழ் குடும்பம் என்றாலே அவனது அடையாளமே தமிழ் பண்பாடு தான். பண்பாடுகள் மறக்கப்பட்டதாலேயும், அதனை மீறி வெளியே போனதாலேயும்தான் கலாச்சார சிதைவுகள் ஏற்பட்டு உள்ளது, அதனை வகைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், இழந்ததை அவர்களுக்கு ஞாபகப்படுத்தவும்தான் இந்த நூலை மாணவர்களிடம் தேடி தேடி கொண்டு செல்கிறேன் என்றார்,
தொடர்ந்து தமிழகத்தில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது குறித்தும் வகுப்பறைக்குள் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது குறித்தும் கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் ரத்த கொதிப்பு, வேகம், நாகரீக வளர்ச்சி, எல்லா அறிவும் நமக்கு இருக்கிறது ஆசிரியர்கள் தேவை இல்லை என நினைக்கிறார்கள், சமீபத்தில் கூட ஆசிரியர் ஒருவரை மாணவன் அடிக்க முயல்வது போன்று செய்தி வெளியானது, அப்போது அந்த ஆசிரியர் அமைதியாக நிற்கிறார், மாணவர்களிடம் இந்த வன்முறை வளர காரணம் அவர்கள் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இல்லாததுதான், ஏதோ ஒரு தவறான சக்தி அவர்களை ஆட்டிப்படைக்கிறது, அதில் இருந்து அவர்கள் வெளியே வரணும், அது ஒரு தவறான பழக்கம், வன்முறையால் ஒரு நல்ல மாணவன் உருவாக முடியாது, ஒரு நல்ல மாணவன் உருவாகவில்லை என்றால் ஒரு நல்ல சமுதாயமே உருவாக முடியாது” என்று தெரிவித்தார்.