TN School Holiday: புரட்டி எடுக்கும் மழை! நாளை 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tamil Nadu School Holiday: தென் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை மூன்று மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (24/11/2025) தென்காசி மற்றும் திருநெல்வெலியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் கனமழை பெய்து வருகிறது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாளை தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாளை (24-11-2025) தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை;
24-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்:
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.






















