கவர்னர் மணிப்பூரைப் பற்றி பேசாமல் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப் பற்றி பேசி வருகிறார் -ஆ.ராசா
அதானி பங்குகளை கூட்டி காமித்து ஒரு பெரிய பிம்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். இந்த நிறுவனம் மீது வழக்கு போட துப்பில்லை.. இது குறித்து மோடியிடம் கேட்டதற்கு பதில் இல்லை... கப்சின்னு உள்ளார்.
கலைஞரின் பேனா தமிழக வளர்ச்சி மட்டுமின்றி இந்தியாவின் இறையான்மையையும் காத்து உள்ளது என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா.
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
ஆ.இராசா பேசுகையில், “கலைஞரின் நூற்றாண்டு விழாவை பற்றி பேசுவதற்கு முன் அவருடைய தத்துவம், தலைமை, நிர்வாகம், என பலவற்றையும் பற்றி பேச வேண்டும். கட்சி தலைவராக 50 ஆண்டு, எம்.எல்.ஏவாக 60 ஆண்டு, 5 முறை தமிழக முதல்-அமைச்சர் என்று அவருடைய வரலாறு தொடர்ந்தன. தமிழகத்தில் கலைஞரை வைத்து நான் பயனடையவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் அரசியலுக்கு ஆபத்து வந்த போது எல்லாம், அதனை தடுப்பதற்கு துணை நின்றவர் கலைஞர். மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் என்ற பெயரில் தேவையில்லாததை கொண்டு வருகிறார்கள்.
எல்ஐசியில் மக்கள் போடும் பணத்தை பல லட்சம் கோடி அதானியிடம் முதலீடு செய்தார் மோடி, ஓஎன்ஜிசி, பெட்ரோலிய நிறுவனங்கள் பல லட்சம் கோடி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்கின்றனர். இதற்கு மோடியே அரசு விமானத்தில் வெளிநாட்டிற்கு கூட்டி சென்று அந்நாட்டில் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அதானிக்கு கார்ப்பரேட் மதிப்பு கூடுகிறது. உலகத்தினுடைய முதல் பணக்காரனாக மோடியால் அதானி வருகிறார். 9 ஆண்டு காலத்தில் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரராக மாறுகிறார். அவர் என்ன செய்தார் என்று ஹிண்டன்பர்க் என்ற உளவுத்துறை நிறுவனம் வெளியே கொண்டு வந்தது. அதானி பங்குகளை கூட்டி காமித்து ஒரு பெரிய பிம்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். இந்த நிறுவனம் மீது வழக்கு போட துப்பில்லை.. இது குறித்து மோடியிடம் கேட்டதற்கு பதில் இல்லை... கப்சின்னு உள்ளார். இதனை பெங்களூரில் ஒரு நபர் ட்விட்டர் பதிவு செய்ததார் என்று அவரை ஜெயிலில் போட்ட நீங்கள், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் என்னை பிடித்து உள்ளே போடு.. ஏனென்றால் நீ ஒரு பிராடு, அதான் அமைதியாக இருக்கின்றாய்.
இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் உத்திரபிரதேசத்தில் 35 சதவீதம், குஜராத்தில் 24 சதவீதம், தமிழ்நாட்டில் 11 சதவீதம், கேரளா 10 சதவீதம் என்று கணக்கெடுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் திராவிட மாடல் தான் வென்றுள்ளது. குஜராத் மாடல் அல்ல. காஷ்மீரில் 370 பிரிவை எடுத்துவிட்டீர்கள். பல வளர்ச்சி வரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒன்றும் வரவில்லை. கலைஞரின் பேனா கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கையெழுத்திட்டது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையை கொண்டு வந்தது. இப்படி பல்வேறு வகையில் கலைஞரின் பேனா தமிழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பு இறையான்மையையும் காத்து உள்ளது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை பேச அனுமதிக்கவில்லை. தி.மு.கவை பார்த்து மோடிக்கு பயம் வந்துவிட்டது. தமிழக கவர்னர் மணிப்பூரைப்பற்றி பேசாமல் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப் பற்றி பேசி வருகிறார். மோடியின் செயல்பாடுகளுக்கு முதல்-அமைச்சரின் எதிர்ப்புகள் தொடரும். மோடியை எதிர்த்து எதிர் அணிக்கு தலைமை தாங்குகின்ற வல்லமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. வேற எவருக்கும் இல்லை என்று கருதிகின்றனர். அது உண்மை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுலில் இந்தியாவில் அரசியல் சட்ட அமைப்பு காப்பாற்றுவதற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற அவர் தலைமையில் தேசத்தை மீட்டெடுப்பும் அரசியல் சட்டத்தை காப்பாற்றுவோம். நாட்டின் நலன் முக்கியம் என்று கலைஞரின் வழியில் முதல்-அமைச்சர் பயணிக்கிறார். அவர் வழியில் நாம் அனைவரும் பயணிப்போம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவோம்” என்றார்.