தாமிரபரணியில் குழந்தைகளுடன் கதையாடல் நிகழ்வு: விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வ அமைப்புகள்
'திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளமான தாமிரபரணி படித்துறை கல் மண்டபங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான படித்துறை கதையாடல் நிகழ்வு'
உலகில் கூடுதலான நாகரிகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டது ஏனென்றால், விவசாயத்திற்குத் தேவையான மண்ணும், நீரும் கிடைத்ததாலும், காலநிலை சரியாக இருந்தததாலும், போக்குவரத்திற்கு இலகுவாக இருந்தததாலும் அவர்கள் நதிக்கரையோரங்களில் குடியேறினர். தற்போது மாறிவரும் நகர வாழ்க்கையில் நதிக்கரையையும், அதன் நாகரீக வாழ்க்கையையும் பலரும் உணர்ந்திருக்க முடியாத ஒன்றாகும். வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியின் நதிக்கரையில் தொலைந்து போன நினைவுகளை தங்களது குழந்தைகள் வாயிலாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான நல்ல கருத்துகளை எடுத்துக்கூறும் வகையிலும் நெல்லையில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கப்பட்டு உள்ளது. ஊஞ்சல் முற்றம், குருத்து குழந்தைகள் அமைப்பு, நல்லதை பகிர்வது நம் கடமை, கலை பண்பாட்டு மன்றம் இணைந்து திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளமான தாமிரபரணியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தைகளை ஒருங்கிணைத்து குறுக்குத்துறை நதிக்கரையில் கதையாடல் நிகழ்வை தொடங்கி உள்ளனர்.
நிகழ்ச்சியில் கதைசொல்லி "தாமிரபரணி மதியழகன்" வேடங்கள் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினாா். மேலும் வேடங்கள் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைகளையும், பாடல்களையும் பாடி குழந்தைகளை மகிழ்வித்தார். குழந்தைகள் இயற்கையின் அழகையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டு ரசித்தனர். குறிப்பாக கோமாளி போல் வேடமிட்டும், காக்கா போன்று வேடமிட்டும் குழந்தைகளை அவர்கள் போக்கில் சென்று மனதிற்குள் பதிய வைக்கும் முறையை கையில் எடுத்து உள்ளனர். கதை சொல்வது, நாடகம் நடத்துவது, நகைச்சுவை என மாலையில் 2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து எழுத்தாளர் நாறும்பூநாதன் நிகழ்ச்சி பற்றி கூறும்போது, திருநெல்வேலி படித்துறைகள் பல்வேறு திரைப்படங்களில் காணப்பட்டாலும் அதன் இயற்கை அழகை உள்ளூரில் உள்ள குழந்தைகள் ரசிக்க வேண்டும், படித்துறைகளை பாதுகாக்க வேண்டும், என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள குழந்தைகள் திரையரங்குகள், மாவட்ட அறிவியல் மையம், விளையாட்டு பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கு சென்று வந்திருப்பார்கள். ஆனால் குறுக்குத்துறை மண்டபங்கள் பற்றிய விழிப்புணர்வும், அதன் இயற்கை அழகும் குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே உள்ளூர் குழந்தைகள் முதலில் இதன் அழகையும் இயற்கையை ரசிக்கும் தன்மையையும் உணர வேண்டும் என்பதற்காகவே தாமிரபரணியின் நீண்ட படித்துறைகளை கொண்ட குறுக்குத்துறையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது எனவும், இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் எனவும் தொிவித்தாா். மேலும் வரும் நாட்களில் இதே கல்மண்டபத்தில் 60 மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று ஓவியம் வரையும் நிகழ்வும் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் கூறும் போது, வேடமிட்டு சொல்லிக் கொடுப்பதால் இந்த கதையாடல் நிகழ்வு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, நிகழ்ச்சியில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும், அதன் தூய்மையை பராமரிக்க வேண்டும், கல்மண்டபங்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை அறிந்து கொண்டோம், தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வோம், அதோடு நதியை பாதுகாத்து பராமரிப்போம் என தெரிவித்தனர். அதே போல் பறவைகளை கண்டு ரசித்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தாமிரபரணியையும் அதன் அழகையும் வாழ்நாள் முழுவதும் ரசித்து உணரும் போது அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் தாமாகவே நம்முள் வந்து செல்லும், அதனை சிறு குழந்தைகள் மத்தியில் அவர்களின் மனதில் ஆழமாக பதிய வைப்பதன் மூலம் வருங்காலத்தில் நதியை பாதுகாக்க முடியும் என இது போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் நிகழ்வு பாராட்ட வேண்டிய ஒன்றாகும்..