சசிகலா புஷ்பா வீடு தாக்குதல் - அமைச்சர் கீதாஜீவனின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது
சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு -திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.
பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீட்டை தாக்கிய தி.மு.கவினரை கைது செய்ய வலியுறுத்தி அமைச்சர் கீதாஜீவனின் வீட்டை பா.ஜ.கவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், "எங்கள் தலைவர் அண்ணாமலை பேசும் மேடையில் நாங்களும் ஏறுவோம் என ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் சொல்லியிருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு கால் இருக்காது. பேச நாக்கு இருக்காது" அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையிலும் ஒருமையிலும் சசிகலா புஷ்பா பேசினார்.
இந்த நிலையில் நேற்று சசிகலா புஷ்பா வீட்டில் கார், ஜன்னல் கண்ணாடி, பூந்தொட்டிகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர்தான் எனவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டமும் தொடர்ந்தது.இச்சம்பவம் தொடர்பாக 3 தி.மு.க கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அமைச்சர் கீதாஜீவனின் வீட்டினை முற்றுகையிடுவோம் என பா.ஜ.கவினர் போலீஸாரிடம் கூறிவிட்டுக் கலைந்தனர்.
இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 13 பேரையும் கைது செய்ய வேண்டும் என, தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள பா.ஜ.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் ஊர்வலமாக அமைச்சர் கீதாஜீவன் இல்லத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். 100 மீட்டர் தூரத்திலேயே பா.ஜ.கவினரை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
போலீஸருக்கும் பா.ஜ.கவினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பேரிகார்டுகளை தகர்த்து தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் கூடினர். இதில், ஒரு பிரிவினர், தி.மு.க வடக்கு மாவட்ட அலுவலகம் முன்பாகவும், சாலையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மற்றொரு பிரிவினர் ஊர்வலமாகச் சென்று அமைச்சர் கீதாஜீவனின் இல்லத்தை முற்றுகையிடச் சென்றனர். மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பா.ஜ.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பா.ஜ.கவினர் போராட்டத்தைக் கைவிட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். அமைச்சரின் இல்லத்தை பா.ஜ.கவினர் முற்றுகையிடச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க மாணவர் அணி வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சசிகலா புஷ்பா மீது 504, 505(2), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாபுஷ்பா வீட்டில் தாக்குதலில் ஈடுப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணனை சிப்காட் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.