தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை உருவாக்க வேண்டும் - இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கோரிக்கை
அனைத்து சிறப்புகளையும் தமிழகம் கொண்டுள்ளது. ஒரே ஒரு குறை உள்ளது , அது தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது என்பது இல்லை என்பதுதான்.
தமிழக அரசின் சார்பில் தமிழின் செழுமைகளை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் பொருநை திருவிழா இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை இன்று தமிழக முதல்வர் ஒளி, ஒலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் பவாசெல்லத்துரை பேசுகையில்,
“இலக்கிய விழா அரசு விழாவாக நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு விழாக்களுக்கும், இலக்கிய வாதிகளும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி இந்த பொருநை இலக்கிய திருவிழா மூலம் குறைந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் 5 பெரிய நகரங்களை நதிகளை அடிப்படையாக வைத்து நவீன இலக்கியத்திருவிழாக்கள் சுதந்திர இந்தியாவில் இதுவரை திட்டமிட்டதில்லை. இதுவே முதல்முறை. தமிழகத்திலேயே முதல்முறையாக நடத்தப்படுகிறது, இலக்கிய விழா அரசு விழாவாக ஒரு செயல்படுத்துகிற விழாவாக மாறுகிற போது தான் அதனுடைய உச்சத்தை அடையும், ஆங்காங்கே ராஜேந்திர சோழன் போல் சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். இதை ஒரு அரசாங்கம் அடையாளம் கண்டு கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்போது தான் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த இடைவெளியை குறைத்து எழுத்தாளர்களை மேடைக்கு கொண்டு வந்துள்ளது. இலக்கிய திருவிழாக்கள் என்பது ஒவ்வொரு நதிக்கரையிலும் பெயரளவுக்கு இல்லாமல் உண்மையில் ஆத்மார்த்த ரீதியாக ஒரு அரசுக்கும் கலைஞர்களுக்கும், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கிற எல்லா இடைவெளியையும் தகர்த்து மிக சகஜமாக அனைவரோடும் உரையாடும் அளவிற்கு இந்த இலக்கிய திருவிழா அமைய போகின்றது. அதற்கான முதல் அச்சாரமாக திருநெல்வேலியில் ஆரம்பித்து உள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகையில், “நதிகள் ஒரு கலைஞன் அழைக்கும் பொழுது, ஒரு எழுத்தாளன் அழைக்கும் பொழுது, அல்லது ஒரு கணியான் அழைக்கும் பொழுது நிச்சயமாக தன்னுடைய படித்துறைகளை, செல்லிடங்களையெல்லாம் விட்டு விட்டு இப்படி ஒரு திருவிழாவின் நாற்காலியிலே வந்து அமரும் என நினைக்கின்றேன், பொருநை நதி தன் செல்லும் இடங்களை விடுத்து ஒரு அரங்கில் வந்து சங்கம்மாகியிருக்கிறது. இந்த விழா தமிழக அரசால் 5 இடங்களில் நடத்தப்படும் இந்த விழா நெல்லையில் முதன் முதலாக பொருநை இலக்கிய திருவிழா என நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த தமிழக அரசு இது போன்ற இலக்கிய விழாவை தொடர்ந்து நடத்துகிறதோ அதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அரசு தான் பதவியேற்ற சில நாட்களில் எங்களின் இலக்கிய பிதா பெருமகனான கரிசல் கி. ராஜநாராயணனின் மறைவையொட்டி முதன் முதலாக ஒரு தமிழக எழுத்தாளனுக்கு அரசு மரியாதையை வழங்கியது. புத்தக கண்காட்சியை எப்படி மாவட்டம் தோறும் நடத்தி வருகிறதோ அதே போல இலக்கிய திருவிழாவையும் நடத்தி கொண்டிருக்கிறது, இந்த விழாவை என்னை போல படைப்பாளிகள் நன்றி சொல்லும் வாய்ப்பாகவே பார்க்கிறேன். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தான் பெரும் பெரும் தமிழறிஞர்களுக்கும், மூத்த படைப்பாளிகளுக்கும், என்னை போன்ற படைப்பாளிகளுக்கும், கடந்த இரண்டு வருடமாக கனவு இல்லம் என்கிற ஒரு ஒதுக்கீட்டை செய்து வருகிறது. இந்திய அளவிலே வேறு எந்த மாநில அரசும் செயல்படுத்த முன்வராத முன்னோட்டமான திட்டம் தான் இது. கனவு இல்லத்தை ஒதுக்கீடு செய்ததற்காக அனைத்து படைப்பாளிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலியில் ஆனித்திருவிழா இருக்கட்டும் அதே போல நவ., 26,27 இல் இன்னொரு கார்த்திகை திருவிழா அல்லது இலக்கிய திருவிழாவை ஏன் நடத்தக் கூடாது, அதனை தொடர்ந்து நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையோடு தனது உரையை முடித்தார்.
இதனை அடுத்து கேரள மாநில பிரபல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் பேசுகையில், “அனைத்து சிறப்புகளையும் தமிழகம் கொண்டுள்ளது. ஒரே ஒரு குறை உள்ளது , அது தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது என்பது இல்லை என்பதுதான். தமிழகத்தின் அமைச்சர்கள் முதல்வரிடம் எடுத்துரைத்து தமிழுக்கான சாகித்ய அகாடமியை விருதை உருவாக்க வேண்டும். தமிழுக்கு சாகித்ய அகாடமி விருது இல்லாதது தமிழின் பல எழுத்தாளர்களை கெளரவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலை வேதனையும், வலியையும் அளிக்கிறது. மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிக்கு தமிழ் மொழி தான் தாயாக உள்ளது” என தெரிவித்தார்