Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்.
முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000,- வீதம் 2000 மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.
2024- 2025ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (பிஎச்டி) பயிலும் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன விதிகள்?
1) தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெற இயலாது.
2) இத்திட்டத்தின்கீழ் பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள சூடும்ப ஆண்டு வருமான வரம்பான ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) வயது வரம்பு
ஆண்களுக்கு 50 மிகாமலும் மற்றும் பெண்களுக்கு 55 மிகாமலும் இருக்க வேண்டும்.
4) முனைவர் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணாக்கருக்கு பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட படிப்புப்பிரிவு கால அளவிற்குள் அல்லது அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகளுக்கு மட்டும் (Prescribed Duration of Course) ஊக்கத் தொகை வழங்கப்படும்.
5) புதுப்பித்தல் மாணாக்கர் (Renewal students) தங்கள் ஆராய்ச்சி திருப்திகரமாக தொடர்வ்தற்கான உறுதி சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரிடம், அலுவலரிடம் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
6) பல்கலைக் கழகம் / கல்லூரிகளில் ஊக்கத்தொகை / ஊதியத்துடன் கூடிய படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.
7) கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் (ஊதியமில்லா விடுப்பில் இருந்தாலும் கூட) ஊக்கத்தொகை பெற தகுதியற்றவராவர்.
மாணவர்களுக்கு எச்சரிக்கை
8) தவறான தகவல்களுடன் விண்ணப்பித்து கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் நீக்கப்படுவர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
9) மாணவரின் ஆராய்ச்சி திருப்திகரமாக இல்லை என தெரிய வந்தால், அம்மாணாக்கருக்கு கல்வி ஊக்கத் தொகை நிறுத்தப்படும்.
10) விண்ணப்ப படிவத்தில் எவ்வித விவரமும் விடுபடாமல், முழுமையாக பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.01.2025 அன்று மாலை 5.45 மணி.
11) 2024- 2025 ஆம் ஆண்டு கல்வி ஊக்கத் தொகை பெற மாணாக்கர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முந்தைய ஆண்டு விண்ணப்பங்கள் மூலம் கல்வி ஊக்கத் தொகை பெற மாணாக்கர்கள்விண்ணப்பித்திருப்பின் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
12) கல்வி நிறுவன முதல்வரது கையொப்பம் மற்றும் பல்கலைக்கழக பதிவாளரின் பரிந்துரையுடன் விண்ணப்பம் வரப்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
13) பயனாளிகள் முனைவர் ஆராய்ச்சி முடிக்கும்பொழுது அதற்கான அறிக்கையினை அரசுக்கு அனுப்பிட வேண்டும்.
14) 31.01.2025-க்கு பிறகும், விளம்பரம் வெளியிடுவதற்கு முன்னரும் பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அதேபோல ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் எனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, இயக்குநர், ஆதிதிராவிடர் நலத இயக்குநரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600005.