வழக்கில் ஆஜராக தொண்டர்கள் படை சூழ புதிய காரில் தென்காசி நீதிமன்றம் வந்த ராக்கெட் ராஜா
தென்காசி நீதிமன்றத்தில் புதிய இனோவா வாகனத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் படை சூழ பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கேட் ராஜா ஆஜர் - போலீசார் குவிப்பால் பரபரப்பு
தொண்டர்கள் படை சூழ புதிய இனோவாவில் வந்திறங்கிய ராக்கெட் ராஜா:
பனங்காட்டு படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நடைபெற்று வந்த நிலையில் இன்று தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் நீதிமன்றம் முன்பாக குவிக்கப்பட்டனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணிகளுக்கு மத்தியில் புதிய இனோவா கார் ஒன்றில் தனது, தொண்டர்கள், வழக்கறிகஞர்கள் படை சூழ ராக்கெட் ராஜா வந்திறங்கினார்.
வழக்கின் பின்னணி:
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009ம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் என்பவர் உட்பட இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கோழி அருளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது தான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக கூறினார். இத்தகவலின் பேரில் போலீசார் 2009-ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு ராக்கெட் லாஞ்சரும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக் கூடிய தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அதன் பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தவல்லி ஜுலை 15ம் தேதி தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து இறங்கிய ராக்கெட் ராஜா மீண்டும் 5.08.24 அன்று ஆஜராகும் படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையொட்டி ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.