TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Tamilnadu School Leave Today (03-12-2025): கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu School Leave Today (03-12-2025): தமிழ்நாட்டில் உள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், தொடர்ந்து சென்னை அருகே நிலவுவதால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை:
தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு இன்று திருவண்னாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையேறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
தமிழக கடலோரத்தில் இருந்து மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விலகிச் சென்றது. நள்ளிரவு சமயத்தில் மரக்காணம் அருகே காற்ரழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்து சென்றதாக தகவல். தொடர்து இன்று மாலைக்குள் அது ஆழ்ந்த காற்ரழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடமாவட்டங்களில் சில இடங்களில் இன்று தரைக்காற்ரு வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
வானிலை மைய அறிக்கையின்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை நிலவரம் என்ன?
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியம் இருக்கக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.




















