கண்மாயை ஆக்ரமித்து தனியார் நிறுவனம் உப்பளம் - தீப்பந்தத்துடன் கண்மாய்குள் குடியேறிய கிராம மக்கள்
இது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை அல்ல; 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனியார் உப்பு நிறுவனங்களை எதிர்த்து வருகிறார்கள் என கடலாடி வருவாய் துறையினர் விளக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி தாலுகா, மாரியூருக்கு அருகே கண்மாயை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் உப்பளம் அமைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீப்பந்தங்களுடன் கண்மாயிக்குள் குடியேறி, உணவு சமைத்து நான்கு ஐந்து நாட்களாக போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை அல்ல 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனியார் உப்பு நிறுவனங்களை எதிர்த்து வருகிறார்கள் என கடலாடி வருவாய் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
உப்பளத்தால் விவசாயம் அழியும்
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே மடத்தாகுளம் கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மழைக்காலங்க பெய்யும் நீரைக் கொண்டு நெல், பருத்தி, கம்பு, கேழ்வரகு, கடலை, பனை மற்றும் தானிய வகைகளை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் இந்த கண்மாயை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உப்பளம் அமைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த எட்டு மாதமாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். கண்மாய் உப்பளமாக மாற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, மழை நீரை சேமிக்க முடியாமல் விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்படுவோம். நிலத்தடி நீர் முழுவதும் உப்பாக மாறி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு என கடந்த எட்டு மாத காலமாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பாத்திரங்கள் உடன் கண்மாயில் குடியேறிய மக்கள்
இதனால் பாதிப்படைந்த கிராம மக்கள் கண்மாயை மீட்க முடிவெடுத்து, கிராமத்திலுள்ள 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்களுடன் தீப்பந்தம் ஏந்தி கண்மாய்க்குள் குடியேறினர். கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரிகள் தனிதார் உப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது,எங்களது கண்மாயை உப்பள நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தாசில்தாரிடம் மனு கொடுத்தோம், மாவட்ட கலெக்டரிடம் நான்கு முறை மனு கொடுத்தோம் ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை ஒரு வாரமாக பச்சிளங்குழந்தைகளுடன் போராடி வருகிறோம். தாசில்தார், வி.ஏ.ஓ., ஆர்.ஐ ஆகியோர் எங்களை சந்திக்காமல் உப்பள முதலாளிகளை சந்தித்து பணத்திற்கு விலைபோகின்றனர். ஆனால், எங்களை விரட்டுவதிலியே அதிகாரிகள் குறியாக இருக்கின்றனர். உயிரே போனாலும் கண்மாயை மீட்காமல் போகமாட்டோம் என கூறினர்.
ஒரு கிராமத்தின் 8 மாத போராட்டம்
மேலும், கடந்த 8 மாத காலமாக வேலைய விட்டுட்டு கண்மாயை மீட்க போராடி வந்து கிட்டு இருக்கோம். நான்கு நாட்களாக கண்மாயில் சமைச்சு சாப்பிட்டு போராடி வருகிறோம். எங்கள பாதுகாக்க ஒரு போலீஸ் கூட வரல. ஆனா உப்பள முதலாளிகளை பாதுகாக்க கீழக்கரை, சாயல்குடியில் இருந்து போலீஸ் வந்திருக்காங்க. முதலமைச்சர் ஆறு, குளம், கண்மாய் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் என கூறி வருகிறார். நாங்கள் 8 மாத காலமாக ஒரு கிராமமே கண்மாயை மீட்க போராடி வருவது அவருக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. இந்தக் கண்மாய் நீரை நம்பி 100 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறோம். இந்த உப்பளத்தால் எங்கள் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எத்தனை மாதங்கள் ஆனாலும் இங்கேயே இருப்போம் என கூறினர்.
இந்த பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து கடலாடி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அந்த பகுதிகளில் நான்கு தனியார் நிறுவனத்தார் 900 ஏக்கர் விளைநிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே விலைக்கு வாங்கி அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உப்பளம் அமைத்து நடத்தி வருகின்றனர். அந்த 900 ஏக்கர் பரப்பிற்குள் வரும் நீரோடையை அவர்கள் உபயோகத்தில் வைத்து இருந்தது உண்மைதான். நில அளவீடு செய்து அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து தற்போது அந்த பகுதியில் அந்த நீரோடை ஆக்கிரமிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. அதேநேரம் உப்பளங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வதற்காக பூமிக்கு அடியில் குழாய் பதித்து வைத்து உள்ளனர். இது மட்டுமே தற்போது உள்ள பிரச்சினை.
ஓரிரு நாளில் உண்மை தெரியும் - வருவாய்த்துறை அதிகாரிகள்
இதை மிகைப்படுத்தி ஒரு சிலர் தங்களின் சுயலாபத்திற்காக இந்த பிரச்சினையை பூதாகரமாக்கி வருகின்றனர். மேலும் அந்த மடத்தாகுளம் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் இதை எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட ஒரு 25 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்மாய் பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உப்பளங்கள் நடத்தி வருகின்றனர். அதை மூடி மறைப்பதற்கும் தனியார் உப்பளங்களை மிரட்டுவதற்கும் சில குடும்பங்களை தங்களுக்கு ஆதரவாக அழைத்துக்கொண்டு போராட்டம் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். மேலும் வரும் ஓரிரு நாட்களில் ஜிபிஎஸ் கருவி மூலம் அளவீடு செய்து புள்ளி விபரத்தை வெளியிட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்னவென்று அறிந்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும் அரசு உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.