'சோதனைகளை சாதனைகளாக மாற்றிய திறனாளிகள்'! தமிழக மாற்றுத்திறனாளிகள் கபடி குழு - பயிற்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி நடைபெறுகிறது
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணிவீரர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். நான்காவது முறையும் தங்கம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பயிற்சி பெற அடிப்படை வசதிகள் இல்லாததால் தொடர்ந்து விளையாட சிரமம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள். ராமநாதபுரம், சேலம், திருநெல்வேலி, கரூர், திருச்சி, பெரம்பலூர்,மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட சுமார் 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணியில் இடம்பெற்றுள்ளனர். தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, சண்டிகர், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கபாடி வீரர்களுக்கான போட்டிகள் கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இப்போட்டியிலும் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டியிலும் 14 மாநிலங்களையும் வெற்றி பெற்று தமிழக மாற்றுத்திறனாளி கபடி அணியினர் தேசிய அளவில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரையில் பீச் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கபடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி கபடி வீரர்கள்கூறுகையில்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி வீரர்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி வெற்றி கண்டுள்ளோம். கடந்த மூன்று முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளோம். சென்னையில் நடைபெறக்கூடிய நான்காவது தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம். மேலும் தாங்கள் முறையாக பயிற்சி மேற்கொள்வதற்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பொருளாதார பிரச்சினைகள் இருப்பதால் தமிழக அரசும் பல்வேறு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அவர்கள் பேசுகையில், பயிற்சி பெறுவதற்கு முறையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், வாழ்வாதார முன்னேற்றத்திற்கு அரசு வேலைவாய்ப்பையும் பெற்று கொடுத்தால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.எனவே தமிழக முதல்வர் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் செய்வது போல்தமிழக மாற்றுத்திறனாளி கபடி அணிக்கும் உதவிகள் செய்து தங்களுடைய விளையாட்டினை ஊக்குவித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக கடற்கரை பயிற்சிக்கு பின்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபாடி சங்கத்தின் சிறப்பு ஆலோசகர் பாக்கியநாதன், சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கண்ணா, பொருளாளர் செந்தில்குமார், கேப்டன் மகேஷ் உள்ளிட்ட அணி வீரர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேசி தமிழக அரசிடமும் பேசி நியாயமான கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனையோ அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசால் பிறக்கப்படும் ஆணைகள் மாற்றுத்திறனாளிகளை போய் சேர்ந்ததா என கேட்டால், அதற்குறிய பதில் எந்த அரசு அலுவலகத்திலும் கிடைப்பதில்லை. சாதாரணமாக மாற்றுத்திறனாளிகள் பிறருக்கு நிகராக இயல்பு வாழ்க்கையில் வாழ முடியாத நிலையில், தங்களின் திறமையால் தேசிய அளவிலான கபடிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ள இந்த மாற்றத்தை ஏற்படுத்திய திறனாளிகளுக்கு, அரசு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பார்ப்பாக இருக்கிறது.