நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவிலிருந்து வரும் அரியவகை பழங்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரப்படும் அரிய வகை பழங்கள் அனைத்தையும் சுகாதாரத் துறையினர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே எல்லைப் பகுதிக்குள் அனுமதித்து வருகின்றனர்.
தமிழக - கேரளா எல்லையில் சோதனை:
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது, குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய சுகாதார துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு நிபா வைரஸ் தொற்றானது மேலும் பராவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகளில் அந்தந்த மாநில அரசுகள் சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழக - கேரளா எல்லைப்பகுதியிலும் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லை பகுதியான புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் சோதனை சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரிய வகை பழங்கள் தடுத்து நிறுத்தம்:
குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து முழுமையான சோதனைக்கு உட்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தற்போது கேரளாவில் அரிய வகை பழங்களான ரம்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களின் சீசன் காலங்கள் ஆகும். இதனால் கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்களில் அரிய வகை பழமையான ரம்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்கள் குற்றாலத்திற்கு அதிக அளவில் சீசன் காலகட்டம் என்பதால் கொண்டு வரப்படும். இந்த நிலையில், வெளவால்கள் மூலம் இந்த நிபா வைரஸ் தொற்றானது பரவக்கூடும் என்பதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரப்படும் அரிய வகை பழங்கள் அனைத்தையும் சுகாதாரத் துறையினர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே எல்லைப் பகுதிக்குள் அனுமதித்து வருகின்றனர். குறிப்பாக வெளவால்கள் கடித்து சேதம் அடைந்த பழங்கள் ஏதேனும் இருந்தால் அந்த வாகனத்தை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர். அதோடு நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் ஆகும். தொடக்கத்தில் இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவிய நிலையில் பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது. பெரும்பாலும் பழ வெளவால்களிடைருந்து இந்த வைரஸ் பரவுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அறிகுறிகளாக இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். தொற்று பாதிப்பு ஏற்பட்ட 5 முதல் 14 நாட்களுக்கு பின்னர் தான் இந்த அறிகுறிகள் தென்பட தொடங்கும். கடுமையான சுவாச தொற்று, சுவாச பிரச்சினைகள், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி, கோமா நிலைக்கு கூட சொல்லும் நிலை போன்றவை நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.