பல் பிடுங்கிய விவகாரம்: வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. தொடர்ந்து அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு இந்த விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி யாக இருந்த பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல் துறையை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு தமிழக அரசால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் நான்கு வழக்குகளை பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நான்கு வெவ்வேறு நபர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குகள் தொடர்பான 1500 பக்க குற்றப்பத்திரிகையை விசாரணை நடைபெறும் நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 நபர்களும் ஆஜராகினர். தொடர்ந்து அவர்கள் அன்றே தாக்கல் செய்த பிணை மனு குறித்த விசாரணையில் முன்னாள் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி நெல்லை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1 நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவு பிறப்பித்தார்.
அதனை அடுத்து டிசம்பர் 26 ஆம் தேதிக்கும், தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதிக்கும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏஎஸ்பி பல்வேறு சிங் உள்ளிட்ட 15 போலீசாரும் விசாரணைக்கு ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் குறித்து பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்ட நீதிபதி திரிவேணி வழக்கு விசாரணையை இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் 15 பேர் ஆஜராகி இருந்த நிலையில் புகார் அளித்த வேதநாராயணன், சூர்யா, வெங்கடேஷ், அருண்குமார் உள்ளிட்டோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். பல்வீர்சிங் வழக்கு விசாரணை நேற்று வந்ததை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றம் பரபரப்புடன் காணப்பட்டது.