Nellai: நெல்லையில் பள்ளியை சூழ்ந்து ஓடும் பாதாளச்சாக்கடை கழிவுநீர் - சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பள்ளி
வரும் 1ம் தேதி பள்ளி திறக்க இருப்பதால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடும் துர்நாற்றமும் வீசுவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே கிறிஸ்துராஜா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நெல்லை மாநகர் மற்றும் புறநகரை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் வருகையின்றி பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் பள்ளியை சுற்றி ஆங்காங்கே ஆறு போல் கழிவுநீர் ஓடுவதுடன் பள்ளியா அல்லது கழிவு நீர் கால்வாய் செல்லும் இடமா என்று தெரியாத நிலையில் உள்ளது.
குறிப்பாக இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடந்த சில நாட்களாக வெளியேறி வருகிறது. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக மாணவர்களின் வகுப்பறை அமைந்துள்ள பகுதியில் கழிவுநீர் முற்றிலுமாக சூழ்ந்து கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தாலும் கூட இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் பள்ளிகள் தொடங்க இருக்கிறது இதுபோன்று சூழ்நிலையில் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் இந்த கழிவு நீர் பிரச்சினை காரணமாக இப்பள்ளியில் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வு ஒன்று ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், திமுக மாணவர் அணி நிர்வாகியுமான உத்திரன் கூறும்போது, "பாளையங்கோட்டையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் பாதாளச்சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பள்ளி முழுவதும் தேங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 15 நாட்களாக இந்த கழிவுநீர் பிரச்சினை இங்கு உள்ளது. மாநகராட்சியிடம் தெரிவித்த பிறகும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகி உள்ளது. வரும் 1ம் தேதி பள்ளி திறக்க இருப்பதால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடும் துர்நாற்றமும் வீசுவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்