Nellai School Wall Collapse: நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மனுதாரர்கள் இருவரும், இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றுள்ளனர்.
நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர், தலைமை ஆசியர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஆகவே விபத்துக்கு இவர்கள் பொறுப்பேற்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடியிருந்ததால் கட்டடட தன்மை குறித்து மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
நெல்லை தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் 17ல் கழிவறை சுற்று சுவர் இடிந்தது விழுந்தது . இதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், கழிவறை சுற்றுச்சுவர் 2007 லேயே கட்டப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்கள் இருவரும், இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மூடப்பட்டிருந்தது. கட்டிடத்தின் தன்மை குறித்து மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்