Nellai Rains: விடிய, விடிய தண்ணீரில் தவிப்பு! இரு பிள்ளைகளை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை - நெல்லையில் பெரும் சோகம்
நெல்லையில் இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மகன் மற்றும் மகள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லையில் வரலாறு காணாத அளவில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பலர் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்து செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களை கடந்தும் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமலும், உண்ண உணவின்றியும் படுக்க இடமின்றியும் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இடச்சேதம், பொருட் சேதத்தை தவிர்த்து இந்த வெள்ளத்தில் உயிர் சேதமும் ஒரு சில குடும்பத்தை நிற்கதியாக்கி உள்ளது. தங்கள் கண்முன்னே தங்களது உறவினர்களின் உயிர் பிரிவதை காண்பது கொடுமையிலும் கொடுமை. வெள்ளத்தில் இருந்து மீட்க முடியாமலும், அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் கடைசி நேரத்திலாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு போராடியும் கண்முன்னே உயிர் பிரிவது என்பது வேதனையின் உச்சம்.
நெல்லையில் நடந்த அப்படி ஒரு வேதனை சம்பவம் இது தான்:
நெல்லை மாநகர் உடையார்பட்டியை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவர் ஆரல்வாய்மொழியில் சொந்த தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கமலசரஸ்வதி. இவர் திருச்சியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மூத்த மகன் விஜய் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
இந்த சூழலில் கடந்த 17 ஆம் தேதி இரவு பெய்த மழை வெள்ளத்தால் உடையார்பட்டி பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இரவு நேரம் என்பதால் யாரும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இவ்வளவு தண்ணீர் வரும் என்று. வீட்டின் முதல் தளம் வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த சூழலில் வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட நமச்சிவாயம் தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற கடும் முயற்சி எடுத்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் உதவிக்கு வர முடியாத சூழலில், பலருக்கும் தொடர்பு கொண்டு காப்பாற்ற முயற்சி எடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மீட்பு படையினர் யாருமே வரவில்லை என்கின்றனர்.
உயிர் பிரிந்தது:
செய்வதறியாது இரவு முழுவதும் தண்ணீரில் போராடி உள்ளனர். விடியும் வரை அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளனர். யாரும் வரவில்லை, மறுநாள் அப்பகுதியில் உள்ள மக்கள் டயர் மூலம் மூவரையும் மீட்டுள்ளனர். அதுவரை மூவரும் தண்ணீரில் இருந்துள்ளனர். இதில் நமச்சிவாயத்திற்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அவரை மீட்டு மருத்துவனைக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் இரண்டு பிள்ளைகளும் பரிதவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஐ தொடர்பு கொண்டும் வரவில்லை. அக்கம் பக்கத்தினர் போராடி மதிய வேளையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லை. மகன், மகள் கண் முன்னே தந்தை உயிர் பிரிந்துள்ளது. தந்தையின் உடலை வைத்துக் கொண்டு இரண்டு பிள்ளைகளும் செய்வதறியாது கலங்கி நின்றனர்.
அதன்பின்னர் தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அரசு மருத்துவமனை முதல்வரிடம் பேசி உடலை இரவு முழுவதும் மருத்துவமனயில் வைப்பதற்கு அனுமதி பெற்று கொடுத்துள்ளார். பின் தாயை எதிர்பார்த்து இரண்டு பிள்ளைகளும் காத்திருந்த சூழலில், திருச்சியில் இருந்து 19 ஆம் நமச்சிவாயத்தின் தேதி காலை வந்தார். அதன் பின்னரும் காலை 9 மணி முதல் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து தந்தையின் உடலை பெறுவதற்கு காத்திருந்தனர். சந்திப்பு காவல் நிலையமும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்ததால் ஆவணங்கள் தயார் செய்வது தாமதமானது. பின்னர் நேற்று மதியத்திற்கு மேல் தயார் செய்யப்பட்டு மாலை 7 மணிக்கு உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் இரவு 8 மணி அளவில் இறுதிச்சடங்கு செய்ய உடலைக் கொண்டு சென்றனர்.
இது குறித்து மகன் விஜய் தெரிவிக்கும் போது, இரவு முழுவதும் பலருக்கும் போன் செய்து உதவி கேட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை. மறு நாள் தந்தை மயங்கியும் மருத்துவ வசதி கூட கிடைக்காமல் தந்தை உயிரிழந்தார் என நடந்ததை கூற முடியாமல் கலங்கி நிற்கிறார். இவர்களை போன்றே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கும் பல குடும்பங்களின் கண்ணீர் கதை வெளியே தெரியாமல் இருக்கிறது. இவர்களின் துயரை அரசு எவ்வாறு துடைக்கப்போகிறது என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு எடுக்கும் முயற்சிகள் பாதிப்புகளை சீரமைத்தாலும் உயிர் இழப்புகளை எதிர்கொண்ட வீடுகளில் வலிகள் மட்டுமே வடுக்களாக தொடர்கிறது....!